இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா போராடி 387 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து பஸ்பால் ஸ்டைலில் சுமாராக பவுலிங் செய்த இந்தியாவை அடித்து நொறுக்கி 669 ரன்கள் குவித்தது.
இறுதியாக 331 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால், சுதர்சன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 0/2 என சரிந்த இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்குமோ என்று ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். அப்போது நங்கூரமாக விளையாடிய கேப்டன் கில் 78*, ராகுல் 87* ரன்கள் இந்தியாவுக்கு கை கொடுத்தனர்.
கம்பீரின் மோசமான தேர்வு:
அதனால் 174/2 ரன்களை எடுத்துள்ள இந்தியா தோல்வியைத் தவிர்க்க கடைசி நாளில் நங்கூரமாக விளையாட உள்ளது. இந்நிலையில் இத்தொடரில் முதல் போட்டியில் 5 சதங்களை அடித்த இந்தியா ஆரம்பம் முதலே பேட்டிங்கில் ஹீரோயிஷம் செய்து வருவதாக சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். அதையும் தாண்டி வெற்றி பெற தடுமாறுவதற்கு கௌதம் கம்பீரின் தவறான அணி தேர்வே காரணம் என்று அவர் விமர்சித்துள்ளார்.
குறிப்பாக 20 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்று சொல்லும் கம்பீர் அதற்காக குல்தீப் யாதவை எடுக்காமல் ஜடேஜா, சுந்தரைத் வைத்துக்கொண்டு நிதிஷ் ரெட்டி, தாக்கூர் போன்ற ஆல் ரவுண்டர்களை தேர்ந்தெடுப்பதாக மஞ்ரேக்கர் விளாசியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பேட்டிங் துறையில் செய்யும் ஹீரோயிஷத்தையும் தாண்டி இந்தியா தடுமாற மோசமான அணி தேர்வு முக்கிய காரணமாகிறது”
மஞ்ரேக்கர் விளாசல்:
“தாக்கூரால் என்ன செய்ய முடியும் என்பதை நாம் முதல் போட்டியிலேயே பார்த்த பின்பும் மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளோம். கொஞ்சம் பேட் செய்யக்கூடிய பவுலர் வேண்டும் என்ற அந்த விருப்பத்தை மீண்டும் மீண்டும் பார்க்கிறோம். அந்த எண்ணம் கை விடப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் இப்போட்டியில் இந்தியாவுக்கு ஒரு முழுமையான பேட்ஸ்மேன் தேவைப்படுகிறார். கில் – ராகுல் இந்தியாவை காப்பாற்ற தங்களுடைய சிறந்த முயற்சியைக் கொடுக்கிறார்கள்”
இதையும் படிங்க: 206 சேசிங்கில் மேக்ஸ்வெல், க்ரீன் அதிரடியில் அசத்திய ஆஸி.. வெ.இ மண்ணில் வரலாறு காணாத வெற்றி
“இப்படிப்பட்ட சூழ்நிலையில் முழுமையான பேட்ஸ்மேன் மற்றும் முழுமையான விக்கெட் டேக்கிங் பவுலர் இருப்பது உதவியாக இருக்கும். இந்திய அணி தரமாக இருக்கும் வீரர்களை விட்டுவிட்டு 2 திறனைக் கொண்டுள்ள வீரர்கள் பக்கம் சாய்வதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. குல்தீப் யாதவ் இன்னும் விளையாடவில்லை என்பதே இத்தொடரில் இந்திய அணியின் அணுகுமுறை என்ன என்பதைச் சொல்கிறது. 20 விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்று சொல்லும் அவர்கள் அணியை இப்படி தேர்ந்தெடுத்தால் வெல்வது கடினம். ஒருவேளை 20 விக்கெட்டுகள் எடுக்க விரும்பினால் குல்தீப் விளையாடியிருக்க வேண்டும்” என்று கூறினார்.



