வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் நான்காவது போட்டி ஜூலை 27ஆம் தேதி இன்றைய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு பெசட்ரே நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் போராடி 205/9 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரூத்தர்போர்ட் 31, ரோவ்மன் போவெல் 28, ரொமாரியா செபார்ட் 28 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலிய அணிக்கு ஆடம் ஜாம்பா 3, சீன் அபௌட் 2, சேவியர் பார்லெட் 2, ஆரோன் ஹார்ட்டி 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.
ஆஸ்திரேலியா அசத்தல்:
அடுத்ததாக 207 ரன்களை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்சேல் மார்ஷ் டக் அவுட்டானார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் கிளன் மேக்ஸ்வெல் சரவெடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து தமது பங்கிற்கு அதிரடி காட்டிய ஜோஸ் இங்கிலீஷ் அரை சதத்தை அடித்து 51 (30) ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.
மறுபுறம் 1 பவுண்டரி 6 சிக்ஸர்களை பறக்க விட்ட மேக்ஸ்வெல் 47 (18) ரன்கள் குவித்து அவுட்டானார். மிடில் ஆர்டரில் மிட்சேல் ஓவன் 2, கூப்பர் கோன்லி 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். இருப்பினும் ஆரோன் ஹார்ட்டி அதிரடியான 23 (16) ரன்கள் அடித்து முக்கியமான அசத்தினார். அதைப் பயன்படுத்திய கேமரூன் கிரீன் நேர்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முதல் முறையாக வெற்றி:
157 ஸ்ட்ரைக் ரேட்டில் பொறுப்புடன் விளையாடி அவர் கடைசி வரை அவுட்டாகாமல் அரை சதத்தை அடித்து 55* (35) ரன்கள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 19.2 ஓவரில் 206/7 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வெஸ்ட் இண்டீஸ்க்கு ஜெடியா பிளேட்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. அதனால் இத்தொடரில் 4 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா கடைசி போட்டிக்கு முன்பாகவே கோப்பையை வென்றுள்ளது.
இதையும் படிங்க: சச்சினை காப்பியடிச்ச நான் அவரோட சாதனைக்கு ஆசைப்படல.. ஆனா இதை செஞ்சா ரெக்கார்ட் உடையும்.. ரூட் பேட்டி
இதன் வாயிலாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதல் முறையாக ஒரு டி20 தொடரை வென்று ஆஸ்திரேலியா வரலாறு காணாத வெற்றியும் பெற்றுள்ளது. இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸில் 2008இல் விளையாடிய 1 போட்டியில் தோற்ற ஆஸ்திரேலியா 2012இல் 1 – 1 (2) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. 2021இல் 4 – 1 (5) என்ற கணக்கில் தோற்ற ஆஸ்திரேலியா ஒரு வழியாக இம்முறை வெஸ்ட் இண்டீஸில் டி20 தொடரை வென்றுள்ளது.



