
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. குறிப்பாக வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா பரம எதிரி பாகிஸ்தானையும் வீழ்த்தி செமி ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
இந்தத் தொடரில் இளம் வீரர் மற்றும் துணைக் கேப்டன் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் சதத்தை அடித்த அவர் பாகிஸ்தானுக்கு எதிராக 46 ரன்கள் குவித்து அசத்தினார். அதன் காரணமாக ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் முன்னேறி அவர் சாதனை படைத்துள்ளார்.
சமீப காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் தடுமாற்றமாக விளையாடிய அவருக்கு துணை கேப்டன்ஷிப் எதற்கு என்ற விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கில் தொடர்ந்து அசத்தலாகவே விளையாடி வருகிறார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கொஞ்சம் தடுமாறினாலும் ஒருநாள் போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்க கில் தகுதியானவர் என்று ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருப்பதற்கு முழுமையாக தகுதியானவர். சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியிலேயே அவர் சதத்தை அடித்துள்ளது இந்திய அணிக்கு நல்ல அறிகுறியாகும். சமீபத்திய வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல வீரராக இருக்கும் அவர் டெஸ்ட் போட்டிகளில் தனது ஆட்டத்தை மாற்ற முடியவில்லை”
“ஆனால் 3 – 4 வருடங்களாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவருடைய ஆட்டம் சிறப்பாக இருக்கிறது. ஐபிஎல் தொடரிலும் ஓரளவு நன்றாக செயல்பட்டு வரும் அவர் கடந்த சில வருடங்களாக கேப்டனாக விளையாடி வருகிறார். இங்கிருந்து அவர் பெரிய வீரராக வருவார் போல் தெரிகிறது. பவர் பிளே ஓவர்களில் ஃபீல்டிங்கை பயன்படுத்தி அவர் ஆரம்பத்திலேயே அதிரடியாக ரன்கள் குவித்துக் கொள்கிறார்”
இதையும் படிங்க: தோக்கப்போறோம்னு தெரிஞ்சே தவறு செய்த ஷாஹின் அப்ரிடியை திட்டிய இந்திய ரசிகர்கள் – என்ன நடந்தது?
“அதே சமயம் பெரிய ஹிட்டராக இல்லாத அவர் தனது இயற்கையான ஆட்டத்திற்கு வெளியே வந்து விளையாடுவதில்லை. இந்த விளையாட்டில் அசத்துவதற்கு தேவையான திறன்கள் அவரிடம் இருப்பதாக தெரிகிறது. ஐபிஎல் தொடரில் அவரிடம் பேசுவதற்கான வாய்ப்புகள் எங்களுக்கு கிடைத்தது. எனக்கு அவருடைய நடத்தை தான் பிடிக்கும். அவர் பேட்டிங்கிலும் தலைமையிலும் சிறந்தவராக இருக்க விரும்பும் மிகவும் உந்துதல் கொண்ட பையன் போல் தெரிகிறது” என்று கூறினார்.