IND vs WI : பாக் வீரர் இமாம் உலக சாதனையை உடைத்த சுப்மன் கில், இஷானுடன் சேர்ந்து தவான் – ரகானே சாதனையும் உடைத்து அபாரம்

Shubman Gill 2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்றுள்ள இந்தியா 2023 உலக கோப்பைக்கு தயாராகும் இறுதிக்கட்ட பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளது. அந்தத் தொடரில் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் 2019க்குப்பின் முதல் முறையாக தோற்கடித்த வெஸ்ட் இண்டீஸ் நிம்மதி பெருமூச்சு விட்டு பதிலடி கொடுத்தது. மறுபுறம் சோதனை என்ற பெயரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வெடுத்து கொடுத்த வாய்ப்பில் இளம் வீரர்கள் சொதப்பியதால் இந்தியா தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இருப்பினும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் மண்ணில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த அணியாக உலக சாதனை படைத்து கோப்பையை வென்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா இஷான் கிசான் 77 (64) சுப்மன் கில் 85 (92) சஞ்சு சாம்சன் 51 (41) சூரியகுமார் யாதவ் 35 (30) ஹர்டிக் பாண்டியா 70* (52) என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுத்த உதவியுடன் 50 ஓவர்களில் 351/5 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தன்னுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது.

- Advertisement -

கில் சாதனை பட்டியல்:
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ரோமாரியா செபாஃர்ட் 2 விக்கெட்டுகளை விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் சுமாராக பேட்டிங் செய்து இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 35.3 ஓவரில் 151 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 39* (34) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக சர்துள் தாக்கூர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடிக்க நாங்களே போதும் என்று நிரூபித்த இளம் இந்திய படையில் 85 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

மேலும் இந்த தொடர் முழுவதும் அசத்தி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஹாட்ரிக் அரை சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியை மிஞ்சிய சாதனை படைத்த இசான் கிசான் தொடர் நாயகன் விருதை வென்றார். முன்னதாக இப்போட்டியில் 351 ரன்கள் குவிப்பதற்கு 141 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்த இசான் கிசான் – சுப்மன் கில் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட போட்டியில் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த இந்திய ஓப்பனிங் ஜோடி என்ற அஜிங்கிய ரகானே – ஷிகர் தவான் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

- Advertisement -

இதற்கு முன் கடந்த 2017ஆம் ஆண்டு போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தவான் – ரகானே ஆகியோர் 132 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனையாகும். அது போக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த 2வது இந்திய ஜோடி என்ற பெருமையும் அவர்கள் பெற்றுள்ளனர்.

இதற்கு முன் கடந்த 2007 உலக கோப்பையில் பெர்முடாவுக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வீரேந்திர சேவாக் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோர் 202 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முதலிடத்தில் இருக்கின்றனர். இத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை சுப்மன் கில் 27 இன்னிங்ஸ்களில் 1437* ரன்களை 62.48 என்ற சராசரியில் குவித்துள்ளார்.

இதையும் படிங்க:IND vs WI : விராட் கோலி குடுத்த அட்வைஸ் தான் எனக்கு ரொம்ப பெரிய ஹெல்ப்பா இருந்துச்சி – நன்றி கூறிய பாண்டியா

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 27 போட்டிகளின் முடிவில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பாகிஸ்தானின் இமாம்-உல்-ஹக் சாதனையை தகர்த்துள்ள அவர் புதிய சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் (இந்தியா) : 1437*
2. இமாம்-உல்-ஹக் (பாகிஸ்தான்) : 1381
3. ராசி வேன் டெர் டுஷன் (தென்னாபிரிக்கா) : 1353
4. ரியன் டேன் டாஸ்ஷேட் (நெதர்லாந்து) : 1353
5. ஜோனதன் ட்ராட் :(இங்கிலாந்து) 1342
6. பாபர் அசாம் (பாகிஸ்தான்) : 1330

Advertisement