விராட் கோலியின் 50 சதங்களை அந்த பாகிஸ்தான் பிளேயர் உடைப்பாரு.. கம்ரான் அக்மல் அதிரடி பேட்டி

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா மிகச் சிறப்பாக விளையாடி நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் மாபெரும் ஃபைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்த வெற்றிகளில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 700க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து பேட்டிங் துறையில் எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து முக்கிய பங்காற்றி வருகிறார்.

அதிலும் கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தம்முடைய பிறந்தநாளில் உலகக்கோப்பை போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்த அவர் நியூசிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் தன்னுடைய 50வது ஒருநாள் சதத்தை அடித்தார். அதன் வாயிலாக சச்சின் டெண்டுல்கரை முந்திய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த முதல் வீரர் மற்றும் ஒரு உலகக் கோப்பையில் 700 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனைகளை படைத்தார்.

- Advertisement -

கம்ரான் அக்மல் கணிப்பு:
முன்னதாக ஒரு கட்டத்தில் சச்சின் 49 சதங்களை அடித்த போது அதை யாராலுமே உடைக்க முடியாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் தம்முடைய ஃபிட்னஸ் மற்றும் திறமையால் தற்போது விராட் கோலி தகர்த்தது போல இந்த சாதனையும் கண்டிப்பாக வருங்காலத்தில் யாராவது ஒருவர் உடைப்பார் என்றே சொல்லலாம். அந்த சூழ்நிலையில் சச்சின் சொல்வது போல சுப்மன் கில், ஜெய்ஸ்வால் போன்ற ஏதேனும் இந்தியர் விராட் கோலியின் சாதனையை உடைத்தால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

இந்நிலையில் விராட் கோலியின் 50 சதங்கள் சாதனையை இந்திய அணியில் சுப்மன் கில்லும் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமும் உடைப்பதற்கு வாய்ப்புள்ளதாக கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார். இது பற்றி பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “டாப் 3 பேட்ஸ்மேன்கள் மட்டுமே 50 சதங்கள் சாதனையை உடைக்க முடியும். மிடில் ஆடரில் விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பில்லை”

- Advertisement -

“எங்களது அணியில் உடைக்க பாபர் அசாம் இருக்கிறார். அவர்களுடைய அணியில் சுப்மன் கில் இருக்கிறார். இந்த சாதனையை உடைக்கும் பயணத்தில் பாபர் அசாமை விட கில் சற்று பின்னே இருப்பார்” என்று கூறினார். அவர் கூறுவது போல சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது வரிசையில் கில் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ஏற்கனவே நிறைய முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: ஃபைனலில் இந்தியாவை 65க்கு ஆல் அவுட்டாக்கி கோப்பை வெல்வோம்.. வைரலாகும் ஆஸி வீரரின் சவால் பேட்டி

ஆனால் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை விட சிறந்தவர் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடும் பாபர் அசாம் இந்த உலகக்கோப்பையில் சுமாராக செயல்பட்டு தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதனால் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற இடத்தை கில்லிடம் பறிகொடுத்த அவர் இந்த சாதனையை உடைப்பாரா என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement