IND vs WI : அம்பயரால் மிஸ் பண்ணிட்டேன். கடைசி போட்டியில் கண்டிப்பா சதமடிப்பேன் – இளம் இந்திய வீரர் சவால்

Shreyas Iyer LBW
- Advertisement -

குயின்ஸ் பார்க் மைதானத்தில் ஜூலை 24-ஆம் தேதியான நேற்று வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. விடியவிடிய நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 311/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கி 49 ஓவர்கள் வரை சிம்ம சொப்பனமாக இந்திய பவுலர்களை எதிர்கொண்ட ஷாய் ஹோப் 8 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 115 (135) ரன்கள் விளாசினார். அவருடன் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 74 (77) ரன்களும் கெய்ல் மேயர்ஸ் 39 (23) ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஷார்துல் தாகூர் 3 விக்கெட்கள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 312 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ஷிகர் தவான் 13 (31) ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 9 (8) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றினர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 43 (49) ரன்களும் மிடில் ஆர்டரில் ஷ்ரேயஸ் ஐயர் 63 (71) ரன்களும் சஞ்சு சாம்சன் 54 (51) ரன்களும் எடுத்து வெற்றிக்கு போராடி ஆட்டமிழந்தனர். இறுதியில் தீபக் ஹூடா 33 (36) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் அட்டகாசமாக பேட்டிங் செய்த அக்ஷர் பட்டேல் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 64* (35) ரன்களை தெறிக்கவிட்டு அபார பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

மோசமான அம்பயரிங்:
அதனால் த்ரில் வெற்றியை சுவைத்த இந்தியா முதல் போட்டியிலும் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றிருந்ததால் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதித்து காட்டியுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் 79/3 என்ற நிலையில் இந்தியா தடுமாறியபோது ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சனுடன் 4-ஆவது விக்கெட்டுக்கு 99 ரன்கள் முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்த ஷ்ரேயஸ் ஐயர் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 63 (71) ரன்கள் குவித்து பெரிய ரன்களை சேசிங் செய்ய நல்ல அடித்தளமிட்டார்.

இருப்பினும் 3-வது இடத்தில் நங்கூரமாக பேட்டிங் செய்த அவர் அல்சாரி ஜோசப் வீசிய பந்தில் மோசமான அம்பயரிங் காரணமாக எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். அதை அவர் ரிவ்யூ செய்த நிலையில் பந்து லெக் ஸ்டம்ப்பை மிஸ் செய்வது தெளிவாக தெரிந்தாலும் நூல் அளவு ஸ்டம்பில் உரசியதால் ஏற்கனவே அம்பயர் அவுட் கொடுத்துள்ளார் என்பதால் “அம்பயர் கால் (அழைப்பு)” அடிப்படையில் மீண்டும் அவுட் கொடுக்கப்பட்டார். அதனால் அதிருப்தியடைந்த இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சுமாரான நடுவர்களின் முடிவை விமர்சித்தார்கள்.

- Advertisement -

அடுத்த போட்டியில்:
முன்னதாக முதல் போட்டியிலும் 54 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்த அவர் அடுத்த போட்டியில் நிச்சயமாக சதமடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுபற்றி போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “இன்றைய போட்டியில் நான் அடித்த ரன்களால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் அவுட்டான விதத்தில் எனக்கு மகிழ்ச்சியில்லை. இந்தியாவை கடைசி வரை நின்று வெற்றி அடைய வைப்பேன் என்று நினைத்த நான் துரதிர்ஷ்டவசமாக அவுட்டானேன். இருப்பினும் அடுத்த போட்டியில் சதமடிப்பேன் என்று நம்புகிறேன்”

“60 ரன்களில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை நாங்கள் இழந்த போது பேட்டிங் செய்ய வந்த சஞ்சு சாம்சன் அதிரடி அணுகுமுறையை காட்டினார். ஏற்கனவே 20 பந்துகளை நானும் எதிர்கொண்டதால் நாங்கள் இருவரும் இந்தியாவை வெற்றி பெற வைக்க முடியும் என்று நம்பினோம். சுழல் பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்ட அவர் 2 சிக்சர்களை அடித்ததால் போட்டி எங்களது பக்கம் மாறியது” என்று கூறினார்.

- Advertisement -

அதேபோல் கடைசி நேரத்தில் யாருமே எதிர்பாரா வகையில் அட்டகாசமாக பேட்டிங் செய்த அக்ஷர் பட்டேலை அவர் பாராட்டிப் பேசியது பின்வருமாறு. “நாங்கள் உடைமாற்றும் அறையில் ராகுல் டிராவிட் சாருடன் போட்டியை பார்த்த போது மிகவும் பதற்றமாக இருந்தது. அப்போது எப்படி விளையாட வேண்டும் என்று சில யுக்திகளை ராகுல் டிராவிட் களத்திற்கு மெசேஜாக அனுப்பினார்.

இதையும் படிங்க : தல தோனியின் சாதனையை 17 வருடங்கள் கழித்து முறியடித்த அக்சர் படேல் – ஓ இப்படி ஒரு விஷயம் இருக்கா?

அவர்களும் அந்த பரபரப்பான சூழ்நிலையில் அமைதியாக இருந்து சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் பரபரப்பான தருணத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டோம் என்று நினைக்கிறேன். குறிப்பாக அக்சர் பட்டேல் அற்புதமான இன்னிங்க்ஸ் விளையாடினார்” என்று கூறினார்.

Advertisement