ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ப்ரித்வி ஷா 64 ரன்களை குவித்தார். அதன் பின்னர் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
சென்னை அணியில் டூபிளெஸ்ஸிஸ் தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடவில்லை. டூபிளெஸ்ஸிஸ் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி அணி சார்பாக ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டநாயகனாக ப்ரித்வி ஷா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஐயர் கூறுகையில் : இந்த போட்டியில் எங்களது ஆட்டம் சிறப்பாக அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதுபோன்ற மைதானங்களில் கேட்ச் பிடிப்பது என்பது மிகவும் சவாலான விடயமாக இருக்கிறது. இந்த போட்டியில் நாங்கள் டீம் மீட்டிங்கின் போது மைதானத்தின் தன்மையை அறிந்து, சூழ்நிலையை அறிந்து பேட்டிங் செய்ய முடிவெடுத்தோம். அதன்படி துவக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் தவான் ஆகியோர் சிறப்பாக விளையாடி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.
இறுதியிலும் நாங்கள் சிறப்பாக விளையாடி முடித்ததும் நினைக்கிறோம். மேலும் எனது அணியில் ரபாடா, நார்ட்ஜே ஆகிய இருவரும் வைத்திருப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இனிவரும் போட்டிகளிலும் வெற்றி பெற்று அதனை மகிழ்ச்சியாக கொண்டாட இருக்கிறோம் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.