மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று தரம்சாலா நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 58-வது லீக் போட்டியில் விளையாடியிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணியானது 200 ரன்களை அடித்திருந்தும் தோல்வியை சந்தித்திருந்தது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதோடு இந்த தொடரில் தங்களது ஐந்தாவது தொடர்ச்சியான தோல்வியையும் பஞ்சாப் கிங்ஸ் அணி பெற்று தற்போது மோசமான நிலையில் உள்ளது.
மும்பை அணிக்கெதிரான தோல்விக்கு பின்னர் : ஷ்ரேயாஸ் ஐயர் பேச்சு
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவிக்க அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. பின்னர் 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : உண்மையிலேயே இந்த தோல்வியை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. இருந்தாலும் இந்த போட்டியில் நாங்கள் அற்புதமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம் என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்த போட்டியின் இறுதிவரை நாங்கள் வெற்றிக்காக போராடியுள்ளோம்.
திலக் வர்மா அற்புதமான இன்னிங்சை விளையாடி மும்பை அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார், அவருடைய ஷாட் செலக்சன் அனைத்தும் மிகச் சிறப்பாக இருந்தது. போட்டியின் சூழலுக்கு ஏற்ப மைதானத்தின் தன்மையை கணித்து அவர் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. எங்கள் அணியை பொறுத்தவரை அஸ்மத்துல்லா ஓமர்சாய் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க : மோசமான சாதனையுடன் தோல்வியை சந்தித்த பஞ்சாப் கிங்ஸ் அணி – விவரம் இதோ
ஏனெனில் ஒரு கட்டத்தில் 170 முதல் 180 ரன்கள் வரை நாங்கள் எதிர்பார்த்த வேளையில் இறுதி கட்டத்தில் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் எங்கள் அணியை 200 ரன்கள் வரை கொண்டு சென்றார். இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் அடுத்த போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.



