இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 58-வது லீக் போட்டியானது நேற்று தரம்சாலா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
மோசமான சாதனையுடன் தோல்வியை சந்தித்த பஞ்சாப் கிங்ஸ் :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 57 ரன்களையும், அஸ்மத்துல்லா ஓமர்சாய் 38 ரன்களையும் குவித்து அசத்தினர். மும்பை அணி சார்பாக ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
அதனை தொடர்ந்து 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக திலக் வர்மா 75 ரன்களையும், ரயான் ரிக்கல்டன் 48 ரன்களையும் குவித்து அசத்தினர்.
இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியானது ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு மோசமான சாதனையுடன் இந்த தோல்வியை சந்தித்துள்ளது. அதாவது நேற்றைய போட்டியிலும் 200 ரன்கள் அடித்து தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி இதுவரை ஐ.பி.எல் வரலாற்றில் 10 முறை 200 ரன்களை அடித்து தோல்வியை சந்தித்துள்ளது. உலகிலேயே இப்படி 200-க்கும் மேற்பட்ட ரன்களை அதிகமுறை அடித்து அதிகமுறை தோல்வியை சந்தித்த அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க : விராட் கோலிக்கு அடுத்து 2 ஆவது இந்திய வீரராக டி20 போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – ரோஹித் சர்மா
அதேபோன்று இந்த தொடரின் ஆரம்ப கட்டத்தில் முதல் 7 போட்டிகளின் முடிவில் 6 வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்ற பஞ்சாப் அணி தற்போது தாங்கள் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இனிவரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



