டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிராக நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா ஒரு ஓவர் கூட வீசாதது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக களமிறங்கிய அனைத்து வீரர்களுமே அதிரடி காட்ட அதிகபட்சமாக சுனில் நரேன் 39 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் என 85 ரன்களை குவித்தார்.
அவருக்கு அடுத்து ரகுவன்ஷி 27 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 54 ரன்கள் குவித்தார். பின்னர் 273 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 17.2 ஓவர்களில் 166 ரன்களில் ஆட்டமிழந்தது.
இதன் காரணமாக கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது கொல்கத்தா அணியில் இடம் பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா ஒரு ஓவர் கூட பந்துவீசாதது ஏன்? என்ற கேள்வி எழும்பியுள்ளது.
இந்நிலையில் இந்த சந்தேகத்திற்கு பதிலளிக்கும் விதமாக போட்டி முடிந்த பின்னர் பேசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெளிவான விளக்கம் ஒன்றினை அளித்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் : ஹர்ஷித் ராணாவிற்கு காயம் ஏற்பட்டதாலயே இந்த போட்டியில் அவர் பந்துவீசவில்லை. இருப்பினும் அவருக்கு எந்த மாதிரியான காயம் ஏற்பட்டுள்ளது என்பது எனக்கு சரியாக தெரியாது.
இதையும் படிங்க : 80 லட்சம் க்ளோஸ்.. ரிஷப் பண்ட் தலைமையிலான மொத்த டெல்லி அணிக்கும் கொடுக்கப்பட்ட பெரிய தண்டனை
பீல்டிங்கின் போது அவர் தோள்பட்டையை பிடித்தவாறு வலியை உணர்ந்தார். பீல்டிங் செய்யும் போது ஏற்பட்ட ஏதாவது அசவுகரியத்தால் அவருக்கு வலி ஏற்பட்டிருக்கலாம். இதே போன்ற சூழல் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் அவர் இந்த போட்டியில் பந்துவீசவில்லை. இருப்பினும் வைபவ் அரோரா மிகச் சிறப்பாக செயல்பட்டார் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.