
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 23ஆம் தேதி துவங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களுடைய புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமித்துள்ளது. இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் கணிசமாக அசத்திய அவர் டெல்லி அணியை வரலாற்றிலேயே முதல் முறையாக 2020 ஐபிஎல் தொடரின் ஃபைனல் வரை அழைத்துச் சென்று சாதனை படைத்தார்.
அதன் பின் காயத்தை சந்தித்ததால் டெல்லி அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட அவர் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். அவருடைய தலைமையில் கடந்த வருடம் கொல்கத்தா மூன்றாவது கோப்பையை வென்று சாதனை படைத்தது. இருப்பினும் 2025 ஐபிஎல் ஏலத்தில் அவரை தக்க வைக்க முடியாமல் கொல்கத்தா வெளியிட்ட நிலையில் பஞ்சாப் அணி 27 கோடிகள் என்ற பிரம்மாண்ட தொகைக்கு வாங்கியது.
அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராகவும் ஸ்ரேயாஸ் ஐயர் சாதனை படைத்தார். அதைத் தொடர்ந்து 2024 – 25 சயீத் முஸ்தாக் அலி கோப்பையை அவருடைய தலைமையில் மும்பை வென்று சாதனை படைத்தது. அதன் வாயிலாக இந்தியாவில் நடைபெறும் 2 வெவ்வேறு டி20 தொடர்களின் கோப்பைகளை வென்ற முதல் இந்திய கேப்டனாகவும் அவர் சாதனை படைத்திருந்தார்.
அந்த வகையில் கேப்டனாக ஸ்ரேயாஸ் நல்ல அனுபவத்தை கொண்டுள்ளார். அதன் காரணமாக தற்போது பஞ்சாப் தங்களுடைய புதிய கேப்டனாக அவரை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளின் (டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப்) கேப்டனாக செயல்பட்ட முதல் இந்திய வீரர் என்ற புதிய சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைக்க உள்ளார்.
இதற்கு முன் தோனி சென்னை மற்றும் புனே ஆகிய 2 அணிகளின் கேப்டனாக மட்டுமே செயல்பட்டுள்ளார். அதே போல ரோகித் சர்மா உள்ளிட்ட மற்ற இந்திய வீரர்களும் 3 அணிகளுக்கு கேப்டனாக செயல்பட்டதில்லை. ஒட்டுமொத்த வரலாற்றில் குமார் சங்ககாரா, மஹிளா ஜெயவர்தனே, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்குப் பின் 3 அணிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட நான்காவது வீரர் என்ற பெருமையையும் ஸ்ரேயாஸ் பெற உள்ளார்.
இதையும் படிங்க: உண்மையிலே இதுமட்டும் நடந்தா எனக்கு பெருமை தான்.. இந்திய அணிக்கு திரும்புவது குறித்து – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி
இதற்கு முன் பஞ்சாப், டெக்கான் சார்ஜர்ஸ், ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு சங்ககாரா கேப்டனாக செயல்பட்டுள்ளார். ஜெயவர்த்தனே பஞ்சாப், கொச்சி டாஸ்கர்ஸ் கேரளா, டெல்லி ஆகிய 3 அணிகளை வழி நடத்தியுள்ளார். புனே வாரியர்ஸ், புனே (ஆர்பிஎஸ்), ராஜஸ்தான் ஆகிய 3 அணிகளை ஸ்மித் கேப்டனாக வழி நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.