மார்ச் 25-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. பஞ்சாப் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற முதல் போட்டியிலேயே ஷ்ரேயாஸ் ஐயர் பெற்ற இந்த வெற்றி அவருக்கு பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று தந்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி தொடரும் : ஷ்ரேயாஸ் ஐயர்
அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்கள் குவித்தது. பின்னர் 244 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியால் 232 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் என 97 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அந்த அணியின் பெரிய ரன் குவிப்பிற்கு உதவினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர் பல்வேறு சுவாரசியமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த சீசனின் முதல் ஆட்டத்திலேயே 97 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தது சிறப்பான ஒன்று. நான் இந்த போட்டியின் முதல் பந்திலேயே பவுண்டரி எடுத்தேன். அந்த பவுண்டரியின் மூலமே இந்த போட்டியில் நிறைய ரன்கள் சேர்க்கும் நம்பிக்கை கிடைத்தது.
அதேபோன்று கடைசி கட்டத்தில் ஷஷாங்க் சிங் விளையாடிய இன்னிங்ஸ் எங்களுக்கு மிக முக்கியமான இன்னிங்ஸ்ஸாக அமைந்தது. பந்துவீச்சிலும் எங்களது அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. இந்த போட்டியில் ஒரு அணியாக நாங்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதாலே வெற்றி கிடைத்தது.
இதையும் படிங்க : அஷுதோஷ் சர்மாவுக்கு அந்த வாய்ப்பு மட்டும் கெடச்சா கப் டெல்லி அணிக்கு தான் – சிறுவயது கோச் அதிரடி
இந்த வெற்றி எங்களது முதல் வெற்றி தான். ஆனால் இந்த வெற்றியில் கிடைத்த உத்வேகத்தை அப்படியே கொண்டு சென்று இந்த தொடர் முழுவதும் நாங்கள் விளையாடும் போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். இனிவரும் போட்டிகளில் எங்களது முழு திறனும் வெளிவரும் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.



