- Advertisement -
ஐ.பி.எல்

சிஎஸ்கே’வை நொறுக்கி நாக் அவுட் செய்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சேவாக்கின் 17 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி சென்னையில் 49வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சென்னை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை அதிகரித்துள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் மீண்டும் தோற்ற சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் முதல் அணியாக வெளியேறியது.

அப்போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அதிரடியாக விளையாட முயற்சித்த போதிலும் 19.2 ஓவரில் 190க்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஷாம் கரன் 88, தேவால்ட் ப்ரேவிஸ் 32 ரன்கள் அடித்தார்கள். அதிகபட்சமாக சஹால் ஹாட்ரிக் உட்பட 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் சாதனை:

அடுத்ததாக 191 ரன்களை துரத்திய பஞ்சாப் அணியை பிரப்சிம்ரன் சிங் 54, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 72 ரன்கள் அடித்து 19.4 ஓவரில் வெற்றி பெற வைத்தனர். இதையும் சேர்த்து 10 போட்டிகளில் 8வது தோல்வியை சந்தித்த சென்னை அணி வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்தடுத்த வருடங்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. மறுபுறம் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அதிலும் 5 பௌண்டரி 4 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் சிஎஸ்கே அணியின் ஆறுதல் வெற்றியைப் பறித்தார். அத்துடன் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிராக அதனுடைய கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த கேப்டன் என்ற சாதனையையும் ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். கடைசியாக 2008ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் வீரேந்திர சேவாக் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை வெளுத்து வாங்கி 71 ரன்கள் அடித்தார்.

- Advertisement -

சென்னை பரிதாபம்:

தற்போது அந்த 17 வருட சாதனையை ஸ்ரேயாஸ் 72 ரன்கள் அடித்து உடைத்துள்ளார். அத்துடன் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆட்டநாயகன் விருது வென்ற கேப்டன் என்ற சாதனையையும் ஸ்ரேயாஸ் ஐயர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் வீரேந்திர சேவாக், ஆடம் கில்கிரிஸ்ட், கௌதம் கம்பீர், ரோஹித் சர்மா, ரஜத் படிதார் ஆகியோரும் அந்த சாதனையை படைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அவங்க குடுத்த சூப்பர் ஸ்டார்ட் தான் வெற்றிக்கு காரணம்.. சி.எஸ்.கே வை வீழ்த்திய பின்னர் – ஷ்ரேயாஸ் ஐயர் ஹேப்பி

மொத்தத்தில் ஒரு காலத்தில் சிஎஸ்கே தொடர் வெற்றிகளை பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு பெயர் போன அணியாக ஜொலித்தது. ஆனால் இந்த வருடம் யானைக்கும் அடி சறுக்கியது போல் 2020, 2022, 2024க்குப்பின் லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரிய சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

- Advertisement -