ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையில் இந்தியா வென்று சாதனை படைத்தது. அந்தத் தொடரில் அனைவருமே வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். அதில் பேட்டிங் துறையில் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக சாதனை படைத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
குறிப்பாக 4வது இடத்தில் களமிறங்கிய அவர் டாப் ஆர்டர் சரிந்த போதெல்லாம் நங்கூரமாக விளையாடி விராட் கோலி போன்றவர்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தூக்கி நிறுத்தினார். மேலும் ஒரு கட்டத்தில் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக அவர் தன்னுடைய விக்கெட்டை இழந்து வந்தார். அதனால் அவரது பலவீனத்தை அறிந்த எதிரணிகள் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி ஸ்ரேயாஸ் ஐயரை காலி செய்தன.
பலவீனத்தில் முன்னேற்றம்:
அதனால் விமர்சனங்களைச் சந்தித்த அவர் அதற்காக கடினமானப் பயிற்சிகளை எடுத்து கடந்த இங்கிலாந்து தொடரில் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ஷார்ட் பிட்ச் பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டார். அதே போலவே சாம்பியன்ஸ் டிராபியிலும் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடிக் கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம். இந்நிலையில் யாருக்கும் தாம் பதிலடி மெசேஜ் கொடுக்கவில்லை என்று ஸ்ரேயாஸ் கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் ட்ராபியை வெல்வதற்கு உதவியதே தன்னை விமர்சித்தவர்களுக்கான மெசேஜ் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஸ்ரேயாஸ் பேசியது பின்வருமாறு. “சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றி திருப்தியைக் கொடுக்கிறது. நியூஸிலாந்துக்கு எதிராக (லீல் சுற்றில்) சதத்தை அடித்திருந்தால் இன்னும் திருப்தியாக இருந்திருக்கலாம். ஆனால் அதற்காக கவலையில்லை. எனது அணியை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்று 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது அதை விட இனிப்பானதாகும்”
ஸ்ரேயாஸ் மெசேஜ்:
“தன்னம்பிக்கை அளவிலும் அது எனக்கு முன்னேற்றத்தைக் கொடுத்துள்ளது. அதே சமயம் இந்த வருடம் உள்ளூர் கிரிக்கெட்டிலும் நான் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக நிறைய சிக்சர்கள் அடித்துள்ளேன். அதிலிருந்து எனக்கு தன்னம்பிக்கை கிடைத்தது. டெக்னிக்கல் அளவில் கொஞ்சம் அகலமாக நின்று நல்ல அடித்தளத்தை உருவாக்கினேன். அது அந்தப் பந்துகளை எதிர்கொள்வதற்கான சக்தியை கொடுத்தது”
இதையும் படிங்க: 155 கி.மீ வேகத்தை விட.. ஆல் இன் ஆல் பும்ரா மாதிரி இதை செய்றவங்க தான் தங்கமான பவுலர்ஸ்.. ஸ்டைன் பேட்டி
“அந்த டெக்னிக்கை இங்கிலாந்து தொடரிலிருந்து பின்பற்றி வருகிறேன். நான் யாருக்கும் எந்த மெசேஜும் அனுப்பவில்லை. என் மீது தன்னம்பிக்கை வைத்து சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும். அதை செய்தால் மெசேஜ் தாமாக சென்று விடும். இந்த செயல்முறையை பின்பற்றி அசத்துவதற்காக அபிஷேக் நாயர், அம்ரே சார் போன்றவர்கள் உதவினார்கள்” என்று கூறினார்.