ஐபிஎல் 2024 தொடரின் சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது. குறிப்பாக மே 26ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் ஹைதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தியது. அதனால் 2012, 2014க்குப்பின் 3வது கோப்பையை வென்ற கொல்கத்தா அணி மும்பை மற்றும் சென்னை அணிகளை தொடர்ந்து 2வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்தது.
கொல்கத்தாவின் இந்த வெற்றிக்கு கௌதம் கம்பீர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் 2012, 2014இல் கோப்பையை வென்று கொடுத்த அவர் தற்போது ஆலோசகராக கொல்கத்தா அணியில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். இருப்பினும் அவருடைய மேற்பார்வையில் களத்தில் அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழி நடத்திய ஸ்ரேயாஸ் ஐயர் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்கிறார் என்றாலும் மிகையாகாது.
அரிதான சாதனை:
இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத டெல்லி அணி அவருடைய தலைமையில் கடந்த 2020 சீசனில் முதல் முறையாக ஃபைனல் வரை சென்று சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது முதல் முறையாக கேப்டனாக கோப்பையை வென்றுள்ளார். இதன் வாயிலாக எம்எஸ் தோனி, ரோஹித் சர்மா, கௌதம் கம்பீர், ஹர்டிக் பாண்டியா ஆகியோருக்கு பின் ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற 5வது இந்திய வீரர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார்.
முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர் முதல் சீசனிலேயே 439 ரன்கள் குவித்து அசத்தினர். அதனால் “2015 ஐபிஎல் தொடரின் சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருதை” ஸ்ரேயாஸ் வென்றிருந்தார். அங்கிருந்து உண்மையான வளர்ச்சியை கண்டுள்ள அவர் தற்போது கேப்டனாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார்.
இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் வளர்ந்து வரும் வீரர் விருதை வென்று பின்னர் கேப்டனாக கோப்பையை வென்ற 2வது வீரர் என்ற அரிதான சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் கடந்த 2009ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக அபாரமாக விளையாடி கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய ரோகித் சர்மா வளர்ந்து வரும் வீரர் விருதை வென்றார்.
இதையும் படிங்க: நாங்க ஜெயிச்சதுக்கு காரணமே பேட் கம்மின்ஸ் எடுத்த முடிவு தான்.. அவருக்கு நன்றி – ஷ்ரேயாஸ் ஐயர் மகிழ்ச்சி
அதைத் தொடர்ந்து 2013 சீசனில் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே ரோஹித் சர்மா மும்பை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். அவரைத் தொடர்ந்து தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே வளர்ந்து வரும் வீரர் விருதை வென்று கேப்டனாக ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்துள்ளார். அதனால் வருங்காலத்தில் ரோகித் சர்மா போல இவரும் இந்திய கேப்டனாக வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.