இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் இந்த தொடரானது நடைபெற உள்ளதால் இம்முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி தயாராகி வருகிறது. ஏற்கனவே இந்த தொடருக்கான அட்டவணையை ஐசிசி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இவ்வேளையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியை தயார்படுத்தும் முயற்சியில் இந்திய அணியின் நிர்வாகமான பிசிசிஐ தற்போது இறங்கியுள்ளது. அந்த வகையில் ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இவ்வேளையில் இந்த ஒருநாள் தொடரில் காயம் காரணமாக இந்திய அணியின் முன்னணி வீரர்களான பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடாதது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் அவர்களது இடத்தில் இளம் வீரர்களை நிரப்பி தற்போது இந்திய அணி தங்களது வலுவை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் காயத்தில் இருக்கும் வீரர்கள் மீண்டும் எப்போது அணிக்கு திரும்புவார்கள்? என்பது குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலின்படி : கே.எல் ராகுல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்றும் ரிஷப் பண்ட், பும்ரா ஆகியோரது உடல்நிலை குறித்த முழு தகவல் வெளியாகவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அதோடு எதிர்வரும் இந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு துவக்கத்தில் காயம் அடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் விளையாடாமல் தற்போது சிகிச்சை பெற்று வரும் வேளையில் அவரது உடற்பகுதி மிகவும் பொறுமையாக முன்னேற்றத்தை கண்டு வருகிறது. இதன் காரணமாக அவர் காயத்திலிருந்து முற்றிலும் குணமடைய இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதனால் உலககோப்பை தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் லாரா, டிராவிட் சாதனையை கடந்து வரலாறு படைத்த ஸ்டீவ் ஸ்மித் – விவரம் இதோ
மேலும் இந்திய அணியின் நான்காவது இடத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷ்ரேயாஸ் ஐயர் ஒருவேளை இந்த உலகக் கோப்பை தொடரில் இடம் பெறாமல் போனால் அது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.