
இந்திய அணியின் நட்சத்திர வீரரும், ஒருநாள் போட்டிகளுக்கான துணை கேப்டனுமான ஷ்ரேயாஸ் ஐயர் கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியிருந்த போது பீல்டிங் செய்கையில் பந்தினை கேட்ச் பிடிக்க முயன்று அடி வயிற்று பகுதியில் காயமடைந்தார். அதன் காரணமாக தொடர்ந்து சிகிச்சை மற்றும் பயிற்சியையும் அவர் மேற்கொண்டு வந்தார். இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அவரால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை.
அதை தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ள வேளையில் அந்த தொடரில் மீண்டும் ஷ்ரேயாஸ் ஐயர் கம்பேக் கொடுப்பார் என்று கடந்த சில நாட்களாகவே தகவல்கள் அதிகளவு பகிரப்பட்டு வந்தன.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு லேட்டஸ்ட் தகவலின் படி : ஷ்ரேயாஸ் ஐயர் இன்னும் முழு உடற்தகுதியை எட்டவில்லை என்றும் அவர் இந்திய அணிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் வெளியான தகவலில் குறிப்பிடப்பட்டதாவது : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது காயமடைந்த அவர் சிகிச்சையின் போது கிட்டத்தட்ட ஆறு கிலோ வரை எடை குறைந்துள்ளார்.
இப்படி அவருடைய திடீர் எடை இழப்பு தான் அவருக்கு மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பதில் ஒரு சிக்கலாக மாறியுள்ளது. அவர் நெட் பிராக்டீஸில் எளிதாக பேட்டிங் செய்தாலும் இன்னும் பீல்டிங் செய்யும் அளவிற்கு முழு உடற்தகுதி எட்டவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் :
ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது பேட்டிங் செய்வதில் எந்த ஒரு பிரச்சனையும் சந்திக்கவில்லை. ஆனால் காயத்திற்கு பிறகு ஆறு கிலோ எடை குறைந்துள்ளார். அந்த உடல் எடை ஓரளவுக்கு மீட்டெடுக்கப்பட்டாலும் அவருடைய தசை வலிமை இன்னும் பழைய நிலைமைக்கு திரும்பவில்லை.
இதையும் படிங்க : இந்திய அணிக்கு மீண்டும் மாஸ் கம்பேக் கொடுக்க காத்திருக்கும் முகமது ஷமி – பி.சி.சி.ஐ எடுத்துள்ள முடிவு
எனவே தற்போதைக்கு அவரை உடனடியாக அணியில் சேர்த்து விளையாட வைப்பதை விட அவருக்கு தேவையான ஓய்வை வழங்கி முழு உடற்தகுதியை எட்ட அவகாசம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர் இப்படி கூறியதன் மூலம் நிச்சயம் அவர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்பட மாட்டார் என்று உறுதியாகியுள்ளது.