ஓப்பனிங் நல்லாருக்கு, பினிஷிங் மட்டும் பண்ணிட்டா அவர் தான் அடுத்த விராட் கோலி – இளம் வீரரை பாராட்டும் டிகே

Dinesh-Karthik-1
Advertisement

வங்கதேசத்துக்கு எதிராக பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டு அவமானத்தை சந்தித்துள்ளது. குறிப்பாக 2 போட்டிகளிலுமே ஆரம்பத்திலேயே அற்புதமாக பந்து வீசி அடுத்தடுத்த விக்கெட்டுகளை எடுத்த இந்தியா கையில் வைத்திருந்த வெற்றியை மெஹதி ஹசன் போன்ற டெயில் எண்டர்கள் தட்டிப் பறிக்கும் அளவுக்கு அஜாக்கிரதையாக செயல்பட்டது. இதனால் 2023 உலககோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் கத்துக்குட்டி வங்கதேசத்திடம் இப்படி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா நிச்சயம் உலகக்கோப்பையை வெல்லப் போவதில்லை என்ற கவலை இப்போதே இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Shreyas Iyer

போதாக்குறைக்கு பேட்டிங் துறையில் விராட் கோலி, ஷிகர் தவான், ராகுல் போன்ற நம்பிக்கை நட்சத்திர முதுகெலும்பு சீனியர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் இத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஒரு சில இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் மிடில் ஆர்டரில் அசத்திய ஷ்ரேயஸ் ஐயர் 2வது போட்டியில் 82 ரன்கள் குவித்து முடிந்தளவுக்கு வெற்றிக்கு போராடி அவுட்டானார். என்ன தான் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் குறிப்பாக ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக திண்டாட்டினாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் நங்கூரமாக நின்று நேரம் செல்ல செல்ல அதிரடியாக பெரிய ரன்களை குவிக்கும் இவர் சமீப காலங்களில் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

பினிஷிங் பண்ணுங்க:

குறிப்பாக 80, 54, 63, 44, 50, 113*, 28, 80, 49, 24, 82 என கடைசி 11 ஒருநாள் போட்டிகளில் சொந்த மண்ணிலும் வெளிநாட்டு மண்ணிலும் பெரிய ரன்களை குவித்து வரும் அவர் இந்த வருடம் 16 போட்டிகளில் 720 ரன்களை விளாசி 2023 உலகக் கோப்பை இந்திய அணியில் விளையாடுவதற்கு தகுதியான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் இது போல பெரும்பாலான போட்டிகளில் நல்ல ரன்களை குவிக்கும் ஷ்ரேயஸ் ஐயர் கடைசி வரை நின்று பினிஷிங் செய்ய முயற்சித்தால் அடுத்த விராட் கோலியாக வருவார் என்று தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.

டெஸ்ட், டி20 கிரிக்கெட்டை விட ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்படும் விராட் கோலியை போல நல்ல திறமை அவரிடம் இருப்பதாக தெரிவிக்கும் கார்த்திக் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “சமீப காலங்களில் அவர் அபாரமாக செயல்படுகிறார் என்று நினைக்கிறேன். இந்த வருடம் மட்டும் 700+ ரன்களை அடித்துள்ள அவரிடம் தன்னம்பிக்கையும் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் சில பந்துகளை எதிர்கொண்டு பின்னர் அதிரடி காட்டும் திறமை அவரிடம் உள்ளது. அதே போல் சுழல் பந்து வீச்சை அற்புதமாக எதிர்கொள்ளும் அவரை களமிறங்கும் போதெல்லாம் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி எதிரணியினர் சோதிக்கிறார்கள்”

- Advertisement -

“அதில் அவர் சிக்காமல் வெளியே வருகிறார். ஆம் அவரிடம் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறும் லேசான பலவீனம் உள்ளது. இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவற்றையெல்லாம் கடந்து அணிக்காக அவர் சிறந்து விளங்குவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. 2வது போட்டியில் அவரை சுற்றி விக்கெட்கள் விழுந்தாலும் தனது விக்கெட்டை சுலபமாக கொடுக்காமல் அவர் நின்ற விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் கிட்டத்தட்ட இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். இருப்பினும் நீங்கள் உங்களுக்கான பெயர் எடுக்க விரும்பினால் கடந்த பல வருடங்களாக சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி போல பெயரெடுக்க விரும்பினால் இதே ரன்களை கடைசி வரை அவுட்டாகாமல் 120 – 130 ரன்களாக மாற்ற வேண்டும். அது தான் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்”

Dinesh-Karthik-1

“குறிப்பாக சேசிங் செய்யும் போட்டிகளில் கடைசி வரை அவுட்டாகாமல் உங்களது அணியை வெற்றி பெற வைக்க வேண்டும். அதை மட்டுமே 2வது போட்டியில் அவர் செய்ய தவறினார்”

இதையும் படிங்க: IND vs BAN : வைட்வாஷ் அவமானத்தை தவிர்க்குமா இந்தியா, சட்டோகிராம் மைதானம் எப்படி? பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

“ஏனெனில் 82 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான நீங்கள் அதை பினிஷிங் செய்து வெற்றி பெற வைக்க வேண்டும். அதை நீங்கள் தொடர்ச்சியாக செய்ய துவங்கினால் எதிரணியே உங்களைக் கண்டு பயப்பட ஆரம்பிக்கும்” என்று கூறினார்.

Advertisement