இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் பங்கேற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியானது லீக் சுற்று போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. பின்னர் முதலாவது குவாலிபயர் போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணியானது எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
2 ஆவது ஐ.பி.எல் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்திய பரிதாப சாதனை :
இப்படி மும்பை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் பஞ்சாப் அணி வந்ததால் நிச்சயம் பஞ்சாப் அணி கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. ஆனால் ஜூன் 3-ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்த மாபெரும் இறுதி போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியது.
இதன் மூலம் பஞ்சாப் அணி மீண்டும் ஒருமுறை இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்ததன் மூலம் பஞ்சாப் அணியன் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனிக்கு அடுத்து ஒரு பரிதாபமான சாதனையை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
சிஎஸ்கே அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி இதுவரை அந்த அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ள வேளையில் மூன்று முறை அவர் இறுதிப் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு தோல்வியை சந்தித்துள்ளார். அவருக்கு அடுத்து தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காகவும், இந்த நடப்பு 2025-ல் பஞ்சாப் அணியின் கேப்டனாகவும் 2 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிகளில் தோல்வியை சந்தித்த கேப்டன் என்ற சோகமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
மேலும் வெவ்வேறு இரு அணிகளை ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரை கொண்டு சென்று தோல்வியை சந்தித்த முதல் கேப்டன் என்ற சோகமான சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த அவரை அந்த அணி நிர்வாகம் மெகா ஏலத்திற்கு முன்னதாக கழட்டி விட்டது.
இதையும் படிங்க : ஐபிஎல் கப் டெஸ்ட் வெற்றிக்கு 5 மடங்கு கீழே தான்.. மரியாதையை அதுல சம்பாதிங்க.. இளைஞர்களுக்கு கோலி அட்வைஸ்
பின்னர் ஏலத்தில் பங்கேற்ற அவரை பஞ்சாப் அணி 26.75 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு வாங்கியது. அப்படி மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட அவர் பஞ்சாப் அணியின் கேப்டனாக 17 போட்டியில் விளையாடி 604 ரன்கள் குவித்தது மட்டுமின்றி இறுதிப்போட்டி வரை அழைத்து வந்து அணியை அற்புதமாக வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



