உலக கிரிக்கெட்டின் சாம்பியன் தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. 1987, 2011 ஆகிய வருடங்களில் பாகிஸ்தான், இலங்கை போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா வரலாற்றில் முதல் முறையாக இத்தொடரை முழுவதுமாக தங்களது சொந்த மண்ணில் நடத்த உள்ளது ஸ்பெஷலாகும். மேலும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தமாக 48 போட்டிகளில் கோப்பையை வெல்வதற்காக மோத உள்ளன. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா முழுவதுமாக சொந்த ரசிகர்களின் ஆதரவுடன் விளையாட உள்ளது.
அதனால் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை இந்தியா நிறுத்துமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.அதை தொடர்ந்து இந்த உலகக் கோப்பை சிறப்பாக நடத்துவதற்காக போட்டிகள் நடைபெறும் சென்னை சேப்பாக்கம் உள்ளிட்ட முக்கிய மைதானங்களை நவீனப்படுத்தவும் பிசிசிஐ பல கோடிகளை நிதியாக ஒதுக்கி வேலைகளை துவங்கியுள்ளது.
சோயப் அக்தர் சாடல்:
அதே போல உலகக் கோப்பையை தற்போது உலகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வைத்து மக்களிடையே காட்சிப்படுத்தும் வேலையை ஐசிசி செய்து வருகிறது. இதற்கிடையே இந்தியாவின் நடைபெறும் உலகக் கோப்பைக்கான விளம்பர ப்ரோமோவை கடந்த சில தினங்களுக்கு முன் ஐசிசி வெளியிட்டது.
பாலிவுட் பிரபல நடிகர் சாருக்கான் தோன்றி உலகக்கோப்பையின் வரலாற்றையும் பெருமையும் கௌரவத்தையும் பற்றி பேசும் 2.13 நிமிட நீளம் கொண்ட அந்த வீடியோவில் ஷிகர் தவான், ஜெமிமா ரோட்ரிகஸ், தினேஷ் கார்த்திக், சுப்மன் கில் போன்ற நட்சத்திர முன்னாள் இந்நாள் இந்திய கிரிக்கெட்டர்கள் தோன்றி தங்களுடைய மகிழ்ச்சியையும் காத்திருப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். அதே போல முத்தையா முரளிதரன், ஜான்டி ரோட்ஸ் போன்ற ஜாம்பவான் வீரர்களும் இயன் மோர்கன் போன்ற நட்சத்திரங்களும் அந்த உலகக் கோப்பை புரோமோவில் இடம் பெற்றுள்ளனர்.
அது போக 1975இல் க்ளைவ் லாய்ட் முதல் முறையாக கோப்பையை வென்றது முதல் 2011இல் எம்எஸ் தோனி சிக்சருடன் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தது வரை உலகக் கோப்பை வரலாற்றில் நிகழ்ந்த பல்வேறு மறக்க முடியாத தருணங்களையும் ஐசிசி அந்த வீடியோவில் இணைத்துள்ளது. அது போக விராட் கோலி, பென் ஸ்டோக்ஸ் போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்கள் அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தாலும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முகம் ஒரு நொடி கூட வராதது அந்நாட்டு ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் குறிப்பாக 1992 உலகக்கோப்பை பாகிஸ்தான் வென்ற தருணம் அந்த வீடியோவில் ஒரு நொடி கூட இல்லை. மேலும் ஒரே ஒரு நொடி வரும் ஷாஹீன் அப்ரிடி தவிர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் பாபர் அசாம் போன்ற வேறு எந்த பாகிஸ்தான் வீரர்களும் அந்த வீடியோவில் இடம் பெறவில்லை.
குறிப்பாக 2023 ஆசிய கோப்பை விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என்று அறிவித்த இந்தியா பல வகைகளிலும் அந்நாட்டை தட்டிக் கழிக்கும் வகையில் சமீப காலங்களில் செயல்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த வீடியோவிலும் இந்தியாவுடன் சேர்ந்து கொண்டு ஐசிசி தங்களை வேண்டுமென்றே புறக்கணிக்கும் வகையில் எடுத்துள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு.
இதையும் படிங்க:IND vs WI : நேற்றைய 3-ஆம் நாள் ஆட்டத்தில் பெய்த மழையால் இன்றைய 4-ஆம் நாளில் ஏற்படவுள்ள மாற்றம் – விவரம் இதோ
“பாகிஸ்தான் மற்றும் பாபர் அசாமின் குறிப்பிடத்தக்க இருப்பு இல்லாமல் இந்த உலகக்கோப்பை விளம்பரம் முழுமையடையும் என்று நினைத்தவர் உண்மையில் ஒரு நகைச்சுவையான படத்தையே காட்டினார். கமான் நண்பர்களே இது வளர வேண்டிய நேரம்” என்று விமர்சித்துள்ளார். முன்னதாக 2023 ஆசிய கோப்பை விவகாரத்தில் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்த பாகிஸ்தான் இன்னும் தெளிவான முடிவை கொடுக்காததாலேயே ஐசிசி இப்படி செய்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.