- Advertisement -
உலக கிரிக்கெட்

உலகிலேயே இந்த 3 பேர் தான் ஆல் டைம் கிரேட் கிரிக்கெட் வீரர்கள் – பாராட்டும் சோயப் அக்தர்

கிரிக்கெட்டில் எப்போதுமே ஒவ்வொரு தசாப்தத்திலும் ஒரு சில உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் தங்களது அபார திறமையால் உலகை ஆள கூடியவர்களாக இருப்பார்கள். எதிரணி எவ்வளவு பலமாக இருந்தாலும் அதற்கு ஈடுகொடுத்து தனது நாட்டிற்காக பல சரித்திர வெற்றிகளை பெற்று தருபவர்களையே உலகின் தலைசிறந்த வீரர்கள் என வல்லுனர்கள் பாராட்டுவார்கள். அந்த அவ்வகையில் கிரிக்கெட் விளையாட்டு உண்மையாக வளரத் தொடங்கியபோது 70களில் விவ் ரிச்சர்ட்ஸ், மல்கம் மார்ஷல், ரிச்சர்ட் ஹாட்லீ, ஆலன் பார்டர், கவாஸ்கர், டென்னிஸ் லில்லி, சுனில் கவாஸ்கர், கபில் தேவ் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உலக கிரிக்கெட்டில் ஆட்சி செய்தவர்களாக இருந்தனர். அந்த கால கட்டங்களில் இவர்கள் தான் உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என அறியப்பட்டார்கள்.

ஆல் டைம் கிரேட்:
ஆனால் அதன்பின் 90 களில் இளம் வீரர்களாக காலடி வைத்த சச்சின் டெண்டுல்கர், வாசிம் அக்ரம், ஷேன் வார்னே, முரளிதரன் போன்றவர்கள் அவர்களையும் மிஞ்சும் அளவுக்கு ஒரு படி மேலே சென்று பல உலக சாதனைகளை உடைத்தனர். உலகின் எந்த ஒரு இடத்திலும் எவ்வளவு கடினமான சூழ்நிலைகளிலும் மிக சிறப்பாக செயல்பட்டதால் இவர்களை ஆல் டைம் கிரேட் கிரிக்கெட் வீரர்கள் என ரசிகர்கள் கொண்டாடத் துவங்கினர்.

- Advertisement -

அதற்கு ஏற்றார்போல 90களில் உருவெடுத்த இந்த நட்சத்திரங்கள் 80களில் விளையாடிய ஜாம்பவான்களை விட எளிதில் உடைக்க முடியாத பல உலக சாதனைகளை படைத்து வெற்றிக் கோப்பைகளை முத்தமிட்டனர். அதன் பின் தற்போதைய நவீன கிரிக்கெட்டில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ரோஹித் சர்மா போன்ற வீரர்களை உலகின் தலை சிறந்த வீரர்களாக ரசிகர்கள் கொண்டாட துவங்கியுள்ளனர்.

ஷோயப் அக்தரின் 3 ஆல் டைம் கிரேட் வீரர்கள்:
இந்நிலையில் உலக கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய டாப் 3 ஆல் டைம் கிரேட் வீரர்களை பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் நட்சத்திர அதிரடி வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தேர்வு செய்துள்ளார். உலகிலேயே மிகவும் அதி வேகமான கிரிக்கெட் பந்தை வீசி மாபெரும் உலக சாதனை படைத்த சோயப் அக்தர் வரலாற்றில் ஒரு மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக தன்னை நிரூபித்தவர். அப்படிப்பட்ட அவர் இதுபற்றி யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“என்னை பொறுத்தவரை வாசிம் அக்ரம், சச்சின் டெண்டுல்கர், ஷேன் வார்னே ஆகிய 3 பேர் தான் உலகிலேயே தலை சிறந்த கிரிக்கெட் வீரர்கள் ஆவார்கள். இதில் ஷேன் வார்னே இவ்வளவு குறுகிய காலத்திலேயே நம்மை விட்டு சென்றது எனது மனதை உடைத்தது” என கூறினார்.

அவர் கூறும் அந்த 3 கிரிக்கெட் வீரர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாம்பவான் வாசிம் அக்ரம் கிங் ஆஃப் ஸ்விங் என வல்லுனர்களால் போற்றப்படும் ஒரு மகத்தான வீரர் ஆவார். அவர் உலகின் எந்த ஒரு இடமாக இருந்தாலும் அங்கு பந்தை ஸ்விங் செய்து விக்கெட்டுகளை எடுப்பதில் வல்லவராக திகழ்ந்தார். அதேபோல் இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அந்த வாசிம் அக்ரம் உள்ளிட்ட எத்தனையோ உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை பந்தாடி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த ஜாம்பவனாக ஜொலிக்கிறார்.

மிஸ் யூ ஷேன் வார்னே:
மறுபுறம் சுழல் பந்துவீச்சு எனும் கலையின் கலைஞனாக மேஜிக் நிகழ்த்திய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜாம்பவான் ஷேன் வார்னே சமீபத்தில் 52 வயதிலேயே மாரடைப்பால் காலமானார். சச்சின் உள்ளிட்ட எத்தனையோ உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை தனது மாயாஜால சுழல்பந்து வீச்சில் திணறடித்த அவர் இலங்கையின் முத்தையா முரளிதரனை விட உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளராக போற்றப்படுகிறார்.

அவரின் மறைவு பற்றி சோயப் அக்தர் மேலும் பேசியது பின்வருமாறு. “ஷேன் வார்னேவுடன் எனக்கு நிறைய நல்ல நினைவுகள் உள்ளது. அவர் ஒரு மிகப்பெரிய மனதை கொண்ட மனிதர். அவர் எப்போதும் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் முதல் ஆளாக வந்து நிற்கக்கூடிய நல்ல உள்ளம் படைத்தவர். அதேபோல் அவர் ஒரு மிகப்பெரிய பந்துவீச்சாளர். சொல்லப்போனால் ஒரு சுழற்பந்து வீச்சாளரான அவருக்குள் ஒரு அதிரடியான வேகப்பந்து வீச்சாளர் இருந்தார்” என புகழாரம் சூட்டினார்.

- Advertisement -
Published by