- Advertisement -
ஐ.பி.எல்

ஆமை போல லக்னோ திணறிய அதே பிட்ச்சில்.. 9.4 ஓவரில் சூறையாடிய ஹைதராபாத்.. தனித்துவ ஐபிஎல் சாதனை

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே எட்டாம் தேதி இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் நகரில் 57வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அணிக்கு டீ காக் 2, மார்கஸ் ஸ்டோனிஸ் 3 ரன்களில் புவனேஸ்வர் குமார் வேகத்தில் நடையை கட்டினர்.

அதனால் 21/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு மறுபுறம் நங்கூரமாக விளையாடுகிறேன் என்ற பெயரில் தடவலாக பேட்டிங் செய்த கேப்டன் கேஎல் ராகுல் 29 (33) ரன்களில் அவுட்டானார். போதாக்குறைக்கு மறுபுறம் நிதானமாக விளையாட முயற்சித்த க்ருனால் பாண்டியா 24 (21) ரன்களில் ரன் அவுட்டானார். அதனால் 66/4 என தடுமாறிய லக்னோ 150 ரன்கள் தொடாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

சரவெடி சாதனை:
இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரான் மற்றும் ஆயுஸ் படோனி ஆகியோர் அதிரடியாக விளையாடி 5வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினர். அதில் ஆயுஷ் படோனி 55* (30) ரன்களும் நிக்கோலஸ் பூரான் 48* (26) ரன்களும் 20 ஓவரில் லக்னோ 165/4 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத் தொடர்ந்து 166 ரன்களை துரத்திய ஹைதராபாத் அணியும் தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் லக்னோ அணியின் ஆமைவேக பேட்டிங்கை பார்த்து பிட்ச் ஸ்லோவாக இருப்பதாக ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக ஹைதரபாத் அணியின் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் முயல் போல லக்னோ பவுலர்களை தாறுமாறாக அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். அதன் காரணமாக 6 ஓவர் முடிவிலேயே ஹைதராபாத் 107/0 ரன்கள் குவித்தது.

- Advertisement -

ஏற்கனவே டெல்லிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் 6 ஓவரின் முடிவில் 125 ரன்கள் அடித்தது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளே ஓவர்களில் 2 முறை 100க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த முதல் அணி என்ற மாபெரும் சாதனையை ஹைதராபாத் படைத்தது. அதே வேகத்தில் 8.2 ஓவரிலேயே 150 ரன்களை கடந்த ஹைதராபாத் ஒரு டி20 போட்டியில் அதிவேகமாக 150 ரன்கள் அடித்த அணி என்ற உலக சாதனையும் படைத்தது.

இதையும் படிங்க: கெயில், சேவாக்கால் முடியல.. இந்த பையன் என்னோட 400 ரன்ஸ் ரெக்கார்ட்டை உடைக்க வாய்ப்பிருக்கு.. லாரா நம்பிக்கை

இறுதியில் ஹெட் 16 பந்துகளிலும் அபிஷேக் 19 பந்துகளிலும் அரை சதமடித்து வெற்றியை உறுதி செய்தனர். அதில் அபிஷேக் 8 பவுண்டரி 6 சிக்சருடன் 75* (28) ரன்களும் டிராவிஸ் ஹெட் 8 பவுண்டரி 8 சிக்சருடன் 89* (28) ரன்களும் எடுத்ததால் 9.4 ஓவரில் 167/0 ரன்கள் எடுத்த ஹைதராபாத் 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. இதனால் 7வது வெற்றியை பதிவு செய்த ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் சென்னையை முந்தி 3வது இடத்திற்கு முன்னேறியது. அதனால் மும்பை அதிகாரப்பூர்வமாக முதல் அணியாக வெளியேறியது.

- Advertisement -