
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்றது. அதனால் சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதிப் பெற்ற இந்தியா தங்களை உலகின் நம்பர் ஒன் டி20 என்று என்பதை நிரூபித்துள்ளது. குறிப்பாக 2வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா எளிதாக தோற்கடித்தது.
அந்தப் போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 127/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. இத்தனைக்கும் வரலாற்றில் துபாய் மைதானத்தில் முதல் பேட்டிங்கை காட்டிலும் சேசிங் செய்த அணிகள் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது ஆச்சரியமாக அமைந்தது.
மேலும் டாஸ் வென்றதை நியாயப்படுத்தும் வகையில் பேட்டிங் செய்யாத பாகிஸ்தான் அணி இந்தியாவின் தரமான பந்து வீச்சில் ஒரு கட்டத்தில் 64/5 என திணறியது. அதனால் 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானை கடைசி நேரத்தில் ஷாஹின் அப்ரிடி 33* (16) ரன்களை அடித்து ஓரளவு காப்பாற்றினார். அடுத்து விளையாடிய இந்தியா 15.5 ஓவரில் இலக்கைத் தொட்டு எளிதாக வென்றது.
இந்நிலையில் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் துபாய் பிட்ச்சை சரியாக படித்து முதலில் பவுலிங் செய்ய விரும்பியதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ஆனால் தங்களுடைய ஐன்ஸ்டீன் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் அதைத் தவறாக பயன்படுத்தியது ஆரம்பத்திலேயே தோல்வியை உறுதி செய்ததாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பிட்ச் ரிப்போர்ட் பற்றிய மொத்த விவரத்தையும் டாஸ் வீசும் நிகழ்வில் சூரியகுமார் யாதவ் தெரிவித்தார். போட்டியின் பிற்பகுதியில் பனி வரும். அந்த சமயத்தில் பந்து நன்றாக பேட்டுக்கு வரும். அதை சமாளிக்க எங்களிடம் ஆழமான பேட்டிங் வரிசை இருக்கிறது. அதனால் டாஸ் தோற்றாலும் நாங்கள் பந்து வீசவே விரும்புகிறோம் என்று சூரியகுமார் சொன்னார்”
இதையும் படிங்க: இந்தியாவை குறை சொல்லும் ஜென்டில்மேன் பாகிஸ்தான்.. 2006 ஓவலில் ஜென்டில்மேனாக நடந்து கொண்டார்களா?
“ஆனால் எங்களுடைய ஐன்ஸ்டீன் (சல்மான் ஆகா) நாங்கள் பேட்டிங் செய்யப் போகிறோம் என்று சொன்னார்” என அக்தர் பேசிய வீடியோ “டப்மட்” இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய அணி தங்களுடைய கடைசிப் போட்டியில் ஓமனை எதிர்கொள்கிறது. மறுபுறம் தங்களது கடைசிப் போட்டியில் அமீரகத்தை வீழ்த்தினால் மட்டுமே சூப்பர் 4க்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் பாகிஸ்தான் விளையாட உள்ளது.