அதெல்லாம் சரி அம்பயருக்கு எவ்ளோ காசு கொடுத்தீங்க – இந்தியாவின் வெற்றியை விமர்சிக்கும் முன்னாள் பாக் வீரர்கள், ரசிகர்கள் பதிலடி

Virat KOhli No Ball
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெற்ற பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான தன்னுடைய முதல் லீக் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா கடந்த வருடம் துபாயில் பரிசளித்த வரலாற்று தோல்விக்கு பழி தீர்த்தது. உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 159/8 ரன்கள் சேர்த்தது. கேப்டன் பாபர் அசாம், முஹம்மது ரிஸ்வான் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஷான் மசூட் 52* (42) ரன்களும் இப்திகார் அஹமத் 51 (34) ரன்களும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக அரஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சூரியகுமார் என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று திண்டாடிய இந்தியாவை விராட் கோலியுடன் 5வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பர்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்த ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் 40 (37) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

எவ்ளோ காசு:
போதாக்குறைக்கு தினேஷ் கார்த்திக்கும் பொறுப்பின்றி அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் கடைசியில் ரவிச்சந்திரன் அஷ்வின் பதறாமல் தூக்கி அடித்து இந்தியாவை 20 ஓவர்களில் 160/6 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அவரை விட கடைசி வரை அவுட்டாகாமல் சிம்ம சொப்பனமாக செயல்பட்ட விராட் கோலி 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 82* (53) ரன்களை குவித்து இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அப்படி அனல் தெறிக்க நடைபெற்ற அப்போட்டியில் கடைசி ஓவரில் 3 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்ட போது முகமது நவாஸ் வீசிய பந்தை சற்று இறங்கி அடித்த விராட் கோலி சிக்சராக பறக்க விட்டார். ஆனால் அந்த பந்து இடுப்பளவு வந்ததால் விராட் கோலி நோ பால் கேட்டதை அடுத்து பக்கவாட்டில் இருந்த நடுவர் நோ பால் கொடுத்தார்.

பொதுவாக இடுப்புக்கு மேலே வரும் எந்த பந்தாக இருந்தாலும் அது நோ-பால் என்ற விதிமுறை உள்ள நிலையில் விராட் கோலி சற்று க்ரீஸ் விட்டு வெளியே வந்ததாலும் கிட்டத்தட்ட இடுப்பளவு மட்டத்திலேயே இருந்ததாலும் அது நோ பால் இல்லை என்று பாகிஸ்தான் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஆனால் அந்த சமயத்தில் விராட் கோலியின் பின்னங்கால் வெள்ளைக் கோட்டில் இருந்ததால் கிரிக்கெட் விதிமுறைப்படி அது நோ பால் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

- Advertisement -

ஆனால் நடுவர் பணத்தை வாங்கிக்கொண்டு இந்தியாவுக்கு சாதகமாகவும் தங்களுக்கு எதிராகவும் செயல்பட்டதாக பாகிஸ்தான் ரசிகர்கள் கொந்தளித்தனர். மேலும் விராட் கோலி கேட்டதால் நடுவர் 3வது அம்பயரிடம் ஆலோசிக்காமல் நோபால் கொடுத்ததாக வாசிம் அக்ரம், வகார் யூனிஸ் மற்றும் சோயப் மாலிக் போன்ற பாகிஸ்தான் வீரர்கள் தொலைக்காட்சி வர்ணனையில் கூறினர்.

அதை விட மற்றொரு முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் நேரடியாக “அம்பயர் அண்ணா, இன்று இரவு உங்களுக்கு நல்ல உணவு வேண்டும் என்று நினைத்தீர்களா” என டுவிட்டரில் பதிவிட்டு காசுக்காகவும் வசதிக்காகவும் இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கியதாக மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதை டெட் பால் என்று அறிவித்திருக்க வேண்டும் எனவும் நாட்டவர்கள் கூறுகின்றனர்.

அதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் இந்தியா முதலில் பந்து வீசும்போது அஷ்வின் வீசிய 15வது ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட ஷான் மசூட் அடித்த பந்து மைதானத்தில் இருந்த ஸ்பைடர் கேமராவில் பட்டதால் கேட்ச் தடுத்ததை சுட்டிக்காட்டி அந்த பந்தை அதே நடுவர் டெட் பால் வழங்காமல் விட்டதற்கு நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்று பதிலடி கொடுக்கிறார்கள். ஒருவேளை அங்கே கேமரா குறுக்கே வராமல் இருந்திருந்தால் மசூட் 31 ரன்களில் அவுட்டாகியிருப்பார் நீங்கள் 159 ரன்களை எடுத்திருக்க முடியாது என்று ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். இதனால் வெற்றிக்கு பின்பும் இந்த நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Advertisement