
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்பே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய இந்தியா முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு கூட ஜிம்பாப்வே தகுதி பெறவில்லை.
அப்படிப்பட்ட அணியிடம் தோல்வியை சந்தித்ததால் எதிரணி ரசிகர்கள் இந்தியாவை கிண்டலடித்தனர். ஆனால் 2வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கம்பேக் கொடுத்த இந்தியா அதற்கடுத்த போட்டிகளிலும் தொடர்ந்து வென்றது. இறுதியில் 4 – 1 (5) என்ற கணக்கில் முதன்மை வீரர்கள் இல்லாமலேயே கோப்பையை வென்ற இந்தியா தங்களை சாம்பியன் அணி என்பதை நிரூபித்தது.
துபேவின் மனசு:
முன்னதாக அந்தத் தொடரின் கடைசிப் போட்டியில் அசத்தலாக விளையாடிய சிவம் துபே பேட்டிங்கில் 26 (12) ரன்கள் எடுத்தான். அதே போல பந்து வீச்சில் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய அவர் 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆனால் அந்த விருதுக்காக தமக்கு கிடைத்த பரிசுத் தொகையை அவர் அப்படியே போட்டி நடைபெற்ற ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதான பராமரிப்பாளர்களுக்கு கொடுத்து விட்டார்.
குறிப்பாக ஆட்டநாயகன் விருது வென்றதற்காக 500 டாலர்களை சிவம் துபே பரிசாக பெற்றார். அந்த பரிசை அப்படியே மைதான பராமரிப்பாளர்களுக்கு அவர் கொடுத்தது ரசிகர்களின் நெஞ்சங்களை தொட்டது. இந்நிலையில் அந்தத் தொடரின் 5 போட்டிகளையும் மிகச்சிறப்பாக நடத்த உதவிய மைதான பராமரிப்பாளர்களின் உழைப்பை பாராட்டும் வகையில் தம்முடைய பரிசை கொடுத்ததாக சிவம் துபே தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஐஏஎன்எஸ் இணையத்தில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “ஜிம்பாப்வேவில் இருக்கும் மைதான பராமரிப்பாளர்கள் சிறப்பான வேலை செய்தனர். நாங்கள் விளையாடுவதற்கு தகுந்த சூழ்நிலைகளை அவர்கள் அவர்கள் உருவாக்கிக் கொடுத்தனர். இருப்பினும் அவர்களுடைய கடின உழைப்பு அடிக்கடி கவனிக்கப்படாமல் செல்கிறது. எனவே அவர்களுடைய முயற்சிக்கு நான் பாராட்டு தெரிவிக்க விரும்பினேன்.
இதையும் படிங்க: பாண்டியாவுக்கு டாட்டா.. ரோஹித்துக்கு பின் அறிவிக்கப்பட்ட புதிய கேப்டன்.. இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணி
“என்னுடைய ஆட்டநாயகன் விருதுக்காக கிடைத்த பணத்தை கொடுத்ததன் வாயிலாக அவர்களுடைய பங்கிற்கு ஒரு சிறிய வழியில் ஆதரவு கொடுத்தேன் என்று நம்புகிறேன். அவர்களுடைய கடின உழைப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நான் நம்பினேன்” எனக் கூறினார். மொத்தத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஜிம்பாப்வே மைதான பராமரிப்பாளர்களுக்கு துபே கொடுத்த பரிசு உண்மையாக பெரிய உதவியாக இருக்கும் என்றால் மிகையாகாது.