ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோவை தோற்கடித்து தங்களது இரண்டாவது வெற்றியைப் பெற்றது. ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 167 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அடுத்து களமிறங்கிய சென்னைக்கு ரச்சின் 37, சாய்க் ரசீத் 27 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தார்கள்.
இருப்பினும் ராகுல் திரிபாதி 9, ஜடேஜா 7, விஜய் சங்கர் 9 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்ததால் மீண்டும் சென்னை தோல்வி பெறுமோ என்று ரசிகர்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இருப்பினும் அப்போது நிதானமாக விளையாடிய சிவம் துபே 43* ரன்கள் எடுத்தார். அவருடன் சேர்ந்து அதிரடி காட்டிய கேப்டன் தோனி 26* ரன்கள் அடித்து அசத்தினார்.
ரவி பிஸ்னோய் ஓவர்:
அதனால் 5 தொடர் தோல்விகளை நிறுத்திய சென்னை நிம்மதி பெருமூச்சு விட்டது. முன்னதாக அந்தப் போட்டியில் ரவி பிஸ்னோய் தனது முதல் 3 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து நல்ல ஃபார்மில் இருந்தார். அப்படிப்பட்ட அவருக்கு லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் டெத் ஓவரில் வாய்ப்பு வழங்காமல் சர்துள் தாக்கூருக்கு ஓவரை கொடுத்தார்.
அதைப் பயன்படுத்தி தோனி – துபே ஆகியோர் ஃபினிஷிங் செய்தனர். அந்த வகையில் ரவி பிஸ்னோயை கேப்டன் ரிஷப் பண்ட் டெத் ஓவரில் பயன்படுத்தாதது லக்னோவின் தோல்வியை உறுதி செய்ததாக வாசிம் ஜாஃபர் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் அப்போட்டியில் “என்னை விட நீ சிறப்பாக ஸ்பின்னர்களை எதிர்கொள்ளக் கூடியவர் என்பதால் கடைசி வரை விளையாட வேண்டும்” என்று தோனி சொன்னதாக துபே கூறியுள்ளார்.
மாஸ்டர் மைண்ட்:
அவ்வாறு செய்தால் ரவி பிஸ்னோய் பவுலிங் செய்ய வரமாட்டார் என்றும் தோனி கூறியதாக துபே தெரிவித்துள்ளார். இது பற்றி சிஎஸ்கே இணையத்தில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “மஹி பாய் சில விஷயங்களை என்னிடம் சொன்னார். குறிப்பாக பிஸ்னோய்க்கு இன்னும் ஒரு ஓவர் இருக்கிறது. எனவே நீ கடைசி வரை விளையாடினால் பிஸ்னோய் பவுலிங் செய்ய வர மாட்டார் என்று தோனி என்னிடம் சொன்னார்”
இதையும் படிங்க: காயம் இருந்தும் கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் சாஹலை விளையாட வைத்தது ஏன்? – பாண்டிங் விளக்கம்
“மறுபுறம் தோனி இந்தப் பக்கம் வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டார். அதைப் பயன்படுத்தி நான் விளையாடினேன்” என்று கூறினார். அதாவது ஸ்பின்னர்களை துபே அசால்ட்டாக எதிர்கொண்டு சிக்ஸர்களை பறக்கக்கூடியவர் என்பதை அனைவரும் அறிவோம். அதனால் அவரை கடைசி வரை விளையாட வைத்து ரவி பிஸ்னோயை லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் டெத் ஓவரில் பயன்படுத்த முடியாத அளவுக்கு தோனியின் மாஸ்டர்மைண்ட் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.