
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. செப்டம்பர் 10ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய அமீரகம் 57க்கு சுருண்டது. அதிகபட்சமாக அலிசான் சராஃபு 22, கேப்டன் முகமது வாசிம் 19 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணிக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4, சிவம் துபே 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 30, சுப்மன் கில் 20*, கேப்டன் சூரியகுமார் 7* ரன்கள் எடுத்தனர். அதனால் 4.3 ஓவரிலேயே 60/1 ரன்களை எடுத்து எளிதாக வென்ற இந்தியா ஆசியக் கோப்பையை வெற்றிகரமாக துவக்கியது.
முன்னதாக அப்போட்டியில் இந்திய அணி ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே ஆகியோரை நம்பி அர்ஷ்தீப்பை பெஞ்சில் அமர வைத்து ஜஸ்ப்ரித் பும்ராவை மட்டுமே வேகப்பந்து வீச்சாளராக விளையாட வைத்தது. அந்த நம்பிக்கையை வீணடிக்காமல் பாண்டியா, துபே இருவருமே பவுலிங் செய்தார்கள். குறிப்பாக ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் பவுலிங் செய்யாத துபே 2 ஓவரில் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இந்நிலையில் தம்முடைய பந்து வீச்சில் முன்னேற்றமடைய ஹர்திக் பாண்டியா மற்றும் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் உதவியதாக துபாய் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியா நான் பார்த்து தொடர்ச்சியாக கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு வீரர். அவர் என்னுடைய சகோதரரை போன்றவர். ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் அவருடைய அனுபவம் பெரிது”
“எனவே பேட்டிங்கில் கூட அவரிடம் முடிந்தளவு நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அவருடன் என்னை நான் போட்டியாகவும் ஒப்பிட்டும் நினைத்ததில்லை. அவருடன் விளையாடி கற்றுக்கொண்டு என்னை முன்னேற்றுவதையே நான் செய்ய விரும்புகிறேன். நான் பவுலிங் செய்யப்போவதாக தொடர் துவங்குவதற்கு முன்பே கேப்டன், பயிற்சியாளர் என்னிடம் தெரிவித்தனர். என்னுடைய பவுலிங் பயிற்சியாளர் நிறைய விஷயங்களில் உதவி செய்தார்”
இதையும் படிங்க: 11இல் 2 தோல்வி.. மழையைத் தாண்டி இங்கிலாந்தை அதன் கோட்டையான கார்டிஃபில் சாய்த்த தெ.ஆ
“கடந்த இங்கிலாந்து டி20 தொடரின் போது மோர்கல் சில ஆலோசனைகளை தெரிவித்தார். வெள்ளைக்கோட்டை பயன்படுத்தி ஸ்டம்ப் பகுதியிலிருந்து அகலமாக பந்து வீசுங்கள் என்று அவர் சொன்னார். அத்துடன் மெதுவான பந்துகளை வீசுவதற்கான ஆலோசனையையும் கொடுத்த அவர் ரன்-அப்பையும் சரிசெய்ய உதவினார். அந்த மாற்றங்களால் என்னால் நன்றாக பவுலிங் செய்ய முடிகிறது. அவற்றை பின்பற்றி நீண்ட காலம் தயாரானதற்கான பரிசுகள் இப்போது கிடைத்துள்ளது. என்னுடைய வேகமும் நன்றாக இருப்பதால் பந்தை நம்பிக்கையுடன் கையில் எடுக்கிறேன்” என்று கூறினார்