இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஷிவம் துபே டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் தற்போது நிரந்தர இடத்தினை பிடித்து விளையாடி வருகிறார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிரம்மாண்ட சிக்ஸர்களை அடிக்கும் தூபே பந்துவீச்சாளராகவும் கைகொடுப்பார் என்பதனால் இந்திய அணியில் தொடர்ச்சியாக நீடித்து வருகிறார். நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கூட ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.
இந்திய அணியின் லக்கி சார்ம் ஷிவம் துபே :
நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக துபாய் மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலும் இடம் பெற்றிருந்த அவர் பந்து வீசவில்லை என்றாலும் பேட்டிங்கின் போது ஐந்தாவது வீரராக களம் புகுந்து 7 பந்துகளில் ஒரு சிக்ருடன் 10 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். தற்போதைய இந்திய அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஹார்டிக் பாண்டியா என இரண்டு முதன்மை பவுலர்கள் இருக்கும் வேளையில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஷிவம் துபே இருந்து வருகிறார்.
இந்திய அணி தற்போது ஆல்ரவுண்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதால் இனியும் ஷிவம் தூபேவின் பயணம் தொடரும் என்று தெரிகிறது. இதுவரை இந்திய அணிக்காக 36 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4 அரைசதங்களை மட்டுமே அடித்து இருந்தாலும் அணிக்கு தேவைப்படும் போதெல்லாம் மிகச் சிறப்பான பேட்டிங்கையும் வெளிப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் புதிய லக்கி சார்ம் ஷிவம் துபே தான் என்று குறிப்பிட்டு ஒரு புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது. அந்த வகையில் வெளியான தகவலில் : கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதியிலிருந்து தற்போது 2025 செப்டம்பர் வரை ஷிவம் துபே இந்திய அணிக்காக எப்போதெல்லாம் விளையாடி இருக்கிறாரோ அப்போதெல்லாம் இந்திய அணி வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
அப்படி அவர் கடைசியாக விளையாடிய 32 டி20 போட்டிகளில் இதுவரை இந்திய அணி தோற்கவில்லை என்றும் அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கடைசியாக இந்திய அணிக்காக அவர் விளையாடிய 32 டி20 போட்டிகளில் 30 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 2 போட்டிகள் மழை காரணமாக நடைபெறாமல் போயுள்ளது. ஆகையால் தொடர்ச்சியாக இந்திய அணியின் லக்கி சார்ம்மாக அவர் இருந்து வருகிறார் என்பதை இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது.
இதையும் படிங்க : விராட் கோலி, ரோஹித் சர்மாவின் சாதனையை தகர்த்த அபிஷேக் சர்மா – விவரம் இதோ
ஷிவம் துபே பிளேயிங் லெவனில் இருந்து டி20 போட்டிகளில் கடைசி 32 ஆட்டங்களாக இந்திய அணி தோற்காமல் இருந்து வருகிறது. நிச்சயம் இந்த ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



