நடப்பு 2026 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 44 ஆவது போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 107 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி பிரமாதமான வெற்றியை பெற்று அசத்தியது.
கிரிஸ் கெயிலின் சாதனையை முறியடித்த சிம்ரன் ஹெட்மயர் :
அதன்படி நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்களை குவித்து அசத்தியது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக அதிகபட்சமாக சிம்ரன் ஹெட்மயர் 85 ரன்களையும், ரோவ்மன் பவல் 59 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 255 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக மூன்றாவது வீரராக களமிறங்கிய சிம்ரன் ஹெட்மயர் 34 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 7 சிக்சர் என 85 ரன்கள் குவித்து அசத்தினார். அவர் அடித்த இந்த அரை சதத்தின் மூலம் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரரான கிரிஸ் கெயிலின் சாதனை ஒன்றினை முறியடித்துள்ளார்.
இதையும் படிங்க : ப்ளீஸ் மேட்ச்க்கு ரெடியாகாம கிரவுண்டுக்கு வராதீங்க.. இந்திய அணியை விமர்சித்த – ரவிச்சந்திரன் அஷ்வின்
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : டி20 உலக கோப்பை போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரராக கிரிஸ் கெயில் 20 பந்துகளில் அரைசதம் அடித்து முதல் இடத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்று 19 பந்துகளில் அரைசதம் கடந்த ஹெட்மயர் டி20 உலககோப்பை போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக அதிவேக அரைசதம் அடித்த வீரராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



