போய்ருவேன்னு நெனச்சீங்களா, இந்தியாவின் கேப்டனாக மாஸ் கம்பேக் கொடுக்கும் ஷிகர் தவான் – எந்த தொடரில் தெரியுமா

Shikhar-Dhawan
- Advertisement -

டெல்லியை சேர்ந்த நட்சத்திர வீரர் ஷிகர் தவான் கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் தடுமாற்றமாக செயல்பட்டார். இருப்பினும் இங்கிலாந்தில் நடைபெற்ற 2013 சாம்பியன்ஸ் டிராபியில் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனியின் மகத்தான முடிவால் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி அட்டகாசமாக செயல்பட்ட அவர் தங்க பேட் விருது வென்று இந்தியா கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதனால் நிரந்தர தொடக்க வீரராகவும் உருவெடுத்த அவர் 2015 உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக அசத்தி 2017 சாம்பியன்ஸ் டிராபியிலும் தங்க பேட் விருது வென்றார்.

அத்துடன் 2018 ஆசிய கோப்பை மற்றும் நிதஹாஸ் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றிய அவர் 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயத்துடன் சதமடித்து வெற்றி பெற வைத்து வெளியேறினார். அந்த வாய்ப்பைப் பெற்ற கேஎல் ராகுல் சிறப்பாக செயல்பட்டு ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் புதிய தொடக்க வீரராக உருவெடுத்தார். மறுபுறம் காயத்திலிருந்து குணமடைந்த தவான் ஐபிஎல் தொடரில் 400, 500 போன்ற பெரிய ரன்களை எடுத்த போதிலும் அதை அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுக்க தவறியதால் அதுவரை இந்தியாவுக்காக ஆற்றிய பங்கிற்காக ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிரான தொடரில் மட்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டு கழற்றி விடப்பட்டு வந்தார்.

- Advertisement -

மீண்டும் கேப்டன்:
அந்த நிலையில் சமீபத்திய நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய தொடர்களில் சுமாராக செயல்பட்ட அவருக்கு பதிலாக சுப்மன் கில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அதிரடியான சதங்களை அடித்து வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். அதன் காரணமாக 2023 உலகக் கோப்பையில் கில்லை தொடக்க வீரராக வளர்த்து வரும் இந்திய அணி நிர்வாகம் 37 வயதான அவரை கடந்த 6 மாதமாக கழற்றி விட்டு வருகிறது. அந்த நிலையில் 2023 ஐபிஎல் தொடரிலும் சிகர் தவான் சுமாராகவே செயல்பட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்தியாவுக்காக மீண்டும் அவர் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் வரும் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் வழக்கமான தடகள போட்டிகளுடன் 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2014ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற அந்தத் தொடரில் இந்தியா விளையாடவில்லை. இருப்பினும் இம்முறை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஆடவர் மற்றும் மகளிர் அணியை அனுப்ப பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

- Advertisement -

ஆனால் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் 2023 உலகக்கோப்பை துவங்க உள்ளது. எனவே அதில் முழுமையாக தயாராகி புத்துணர்ச்சியுடன் ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை சீனியர் அணி களமிறங்க வேண்டும் என்பதால் இந்த தொடரில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்படுகிறது. அதனால் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட 2வது தர இந்திய அணியை களமிறக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

குறிப்பாக சமீப காலங்களில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே போன்ற தொடர்களில் ஷிகர் தவான் தலைமையில் இளம் அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி கண்டதால் இந்த முடிவை பிசிசிஐ எடுக்க உள்ளது. அதனால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட ஷிகர் தவான் மீண்டும் ஒருமுறை இந்தியாவுக்காக அதுவும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடும் பொன்னான வாய்ப்பை பெற உள்ளார். மேலும் அந்த தொடரில் மகளிர் பிரிவில் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான முதன்மை இந்திய அணி களமிறங்க உள்ளது.

கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் ஃபைனல் வரை சென்று வழக்கம் போல ஆஸ்திரேலியாவிடம் தோற்று தங்கப் பதக்கத்தை கோட்டை விட்ட இந்தியா வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே வென்றது. இருப்பினும் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிரணி தங்கப் பதக்கத்தை வெல்ல போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement