IPL 2023 : 88/9 டூ 143/9, டெயில் எண்டருடன் சரித்திர பார்ட்னர்ஷிப், வேறு எந்த கேப்டனும் படைக்காத வரலாற்று சாதனை படைத்த தவான்

Shikhar Dhawan
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 9ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 14வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்து நிம்மதியடைந்தது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவராக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு முதல் பந்திலேயே பிரப்சிம்ரன் சிங் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அந்த நிலையில் களமிறங்கிய மேத்தியூ ஷார்ட் 1 (3) ரன்களில் அவுட்டானதால் அடுத்து வந்த ஜித்தேஷ் சர்மா நிதானத்தை வெளிப்படுத்த முயற்சித்து 4 (9) ரன்களில் நடையை கட்டினார்.

இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக போராடிய கேப்டன் ஷிகர் தவானுக்கு அடுத்து வந்த சாம் கரண் அதிரடியாக 3 பவுண்டரி 1 சிக்சருடன் 22 (15) ரன்கள் அடித்து கை கொடுக்க முயற்சித்து ஆட்டமிழந்த நிலையில் சிக்கந்தர் ராசா 5 (6), தமிழக வீரர் ஷாருக்கான் 5 (6) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். ஆனாலும் மறுபுறம் நிதானமாக அரை சதமடித்து போராடிய சிகர் தவானுக்கு கடைசி நேரத்தில் ஹார்ப்ரீத் ப்ரார் 1, ராகுல் சஹர் 0, நாதன் எலிஸ் 0 என டெயில் எண்டர்கள் கை கொடுக்க முடியாத அளவுக்கு ஹைதராபாத் அட்டகாசமாக பந்து வீசி ஒற்றை இலக்க ரன்களில் அவுடாக்கியது.

- Advertisement -

தனி ஒருவன் தவான்:
அதனால் 15 ஓவரில் 88/9 என சரிந்த பஞ்சாப் நிச்சயமாக 100 ரன்களை தாண்டாது என்று அனைவரும் நினைத்தாலும் நான் இருக்கும் வரை அது நடக்காது என்று நிரூபிக்கும் வகையில் தனி ஒருவனாக போராடிய ஷிகர் தவான் 10வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய மோகித் ராதே வெறும் 2 (1* ரன்) பந்துகளை மட்டும் எதிர்கொள்ள விட்டு எஞ்சிய அனைத்து பந்துகளையும் தாமே எதிர்கொண்டார். அந்த வகையில் சிறப்பாக செயல்பட்டு சதத்தை நெருங்கிய அவர் நடராஜன் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தும் 12 பவுண்டரி 5 சிக்ஸருடன் 99* (66) ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக மயங் மார்க்கண்டே 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 144 ரன்களை துரத்தி ஹைதராபாத்துக்கு ராகுல் திரிபாதி 74* (48) ரன்களும் ஐடன் மார்க்ரம் 37* (21) ரன்களும் எடுத்து 17.1 ஓவரிலேயே 145/2 எடுக்க வைத்து முதல் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். ஆனாலும் இந்த போட்டியில் பஞ்சாப் எடுத்த 143 ரன்களில் இதர பேட்ஸ்மேன்கள் அனைவரும் சேர்ந்து வெறும் 38 ரன்கள் எடுத்த நிலையில் தனி ஒருவனாக போராடி 99* ரன்கள் எடுத்து மோசமான தோல்வியிலிருந்து காப்பாற்றிய கேப்டன் ஷிகர் தவான் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக வரலாற்றில் விவிஎஸ் லக்ஷ்மன், தோனி போன்றவர்கள் டெயில் எண்டர்களுடன் விளையாடி பலமுறை இந்தியாவை காப்பாற்றியதை போல் இப்போட்டியில் மனம் தளராமல் போராடிய அவருடைய தன்னம்பிக்கை பாராட்டுக்குரியதாகும். அதை விட இப்போட்டியில் 10வது விக்கெட்டுக்கு மோகித் ராதேவுடன் இணைந்து 55* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷிகர் தவான் ஐபிஎல் வரலாற்றில் 10வது விக்கெட்டுக்கு 50+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஜோடி மற்றும் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த ஜோடி என்ற இரட்டை சாதனையை படைத்தார்.

இதற்கு முன் கடந்த 2020 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக கொல்கத்தாவுக்கு எதிராக டாம் கரண் – அன்கித் ராஜ்புத் ஆகியோர் 10வது விக்கெட்டுக்கு 31* ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அதை விட இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் நின்ற அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் தனது அணியில் இருக்கும் எஞ்சிய 9 பேட்ஸ்மேன்களுடன் பேட்டிங் செய்த முதல் கேப்டன் என்ற தோனி, ரோஹித் போன்றவர்கள் படைக்காத வரலாற்று சாதனை படைத்தார்.

இதையும் படிங்க:IPL 2023 : அதிக விலைக்கு வாங்கப்பட்ட 2 சி.எஸ்.கே வீரர்கள் தற்காலிக விலகல் – இதுக்கு அவங்கள வாங்காமலே இருந்திருக்கலாம்

இதற்கு முன் கடந்த 2019இல் பெங்களூருவுக்காக சென்னைக்கு எதிராக பார்த்திவ் பட்டேல் முதல் முறையாக இதே போல் சாதாரண வீரராக எஞ்சிய 9 பேட்ஸ்மேன்களுடன் பேட்டிங் செய்திருந்தார். அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 90களில் அவுட்டாகாமல் இருந்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஷிகர் தவான் : 4*
2. விராட் கோலி/கேஎல் ராகுல்/டேவிட் வார்னர் : தலா 3

Advertisement