இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 56-வது லீக் போட்டியானது நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களை குவித்தது. டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் போரல் 65 ரன்களையும், ஜேக் பிரேசர் மெக்கர்க் 50 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெடுகளை இழந்து 221 ரன்கள் மட்டுமே குவித்ததால் டெல்லி அணியானது 22 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது டெல்லி அணியின் சார்பாக கலீல் அகமது, முகேஷ் குமார் மற்றும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணி சார்பாக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் இந்த போட்டியின் போது நான்கு வீசிய அவர் 48 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டும் கைப்பற்றி இருந்தார். அவர் எடுத்த இந்த விக்கெட்டின் மூலம் டி20 கிரிக்கெட்டில் 350 விக்கெடுகளை எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : 86 ரன்ஸ்.. இதுக்கு 1 நிமிடம் தானா? கொதித்த சாம்சன்.. வெற்றியை மாற்றிய சுமாரான அம்பயரிங்.. ரசிகர்கள் விளாசல்
சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் என அனைத்து வகையான டி20 போட்டிகளிலும் சேர்த்து சாஹல் 350 விக்கெட்டுகளை எடுத்து சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பியூஸ் சாவ்லா 310 விக்கெட்டுகளையும், அஸ்வின் 306 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அடுத்தடுத்த இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.