AFG vs SL : சிட்னி மைதானத்தின் சாதனையை முறையடித்து உலகசாதனை படைத்த ஷார்ஜா மைதானம் – ஆச்சரிய தகவல்

Sharjah
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று துவங்கிய வரலாற்றின் 15ஆவது ஆசிய கோப்பையில் 6 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த துவங்கின. அதில் லீக் சுற்றின் முடிவில் சுமாராக செயல்பட்ட ஹாங்காங், வங்கதேசம் ஆகிய அணிகள் ஆரம்பத்திலேயே வெளியேறிய நிலையில் அசத்தலாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. அந்த நிலைமையில் செப்டம்பர் 3ஆம் தேதியான நேற்று துவங்கிய சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதின. சார்ஜாவில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 200 தொடர்வதற்கு நல்ல வாய்ப்பு இருந்தபோதிலும் 20 ஓவர்களில் 175/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

AFGvsSL

அந்த அணிக்கு 46 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஓபனிங் ஜோடியில் ஹசரதுல்லா 13 (16) ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் 15 ஓவர்கள் வரை அனலாக பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் ரகமதுல்லா குர்பாஸ் 4 பவுண்டரி 6 சிக்சருடன் அரைசதம் கடந்து 84 (45) ரன்களை விளாசி அவுட்டானார். அதுவரை 200 ரன்களை தொடும் வாய்ப்பை கையில் வைத்திருந்த ஆப்கானிஸ்தானுக்கு இப்ராகிம் ஜாட்ரானை 40 (38) ரன்களில் அவுட் செய்த இலங்கை கடைசி நேரத்தில் நஜிபுல்லா ஜாட்ரான் 17 (10) முகமத் நபி 1 (4) ரசித் கான் 9 (7) என அடுத்து வந்த பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் காலி செய்து 200 ரன்களை தொட விடாமல் கட்டுப்படுத்தியது.

- Advertisement -

இலங்கையின் பதிலடி:
அதை தொடர்ந்து 176 ரன்களை துரத்திய இலங்கைக்கு 62 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த தொடக்க வீரர்கள் குசால் மெண்டிஸ் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 36 (19) ரன்களிலும் நிசாங்கா 35 (28) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த சமயத்தில் வந்த அசலங்கா 8 (14) கேப்டன் தசுன் சனக்கா 10 (9) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் மிடில் ஆர்டரில் குணத்திலகா 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 33 (20) ரன்களும் பனுக்கா ராஜபக்சா 31 (14) ரன்களும் எடுத்தனர்.

SLvsAFG

அதை பயன்படுத்தி இறுதியில் ஹஸரங்கா 16* (9) ரன்களும் கருணரத்னே 5* (2) ரன்களும் எடுத்து தேவையான பினிஷிங் கொடுத்தனர். அதனால் 19.1 ஓவரில் 179/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இலங்கை இந்த ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் தங்களை 105 ரன்களுக்கு சுருட்டி படுதோல்வியை பரிசளித்த ஆப்கானிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து சூப்பர் 4 சுற்றில் முதல் வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

- Advertisement -

அத்துடன் சூப்பர் 4 சுற்றில் இலங்கை தனது அடுத்த போட்டியில் வரும் செப்டம்பர் 6ஆம் தேதியன்று இந்தியாவை எதிர்கொள்கிறது. மறுபுறம் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் நவீன்-உல்-ஹக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து போராடிய போதிலும் 200 ரன்களை எடுக்கத் தவறியதால் வெற்றியை தவறவிட்ட ஆப்கானிஸ்தான் வரும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்றால் தான் இறுதிப் போட்டிக்குத் செல்ல முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Hasaranga

ஷார்ஜாவின் உலகசாதனை:
முன்னதாக இப்போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் உலகிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளை நடத்திய மைதானம் என்ற ஆஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் சாதனையை தகர்த்து மாபெரும் உலக சாதனை படைத்துள்ளது. கடந்த 1982இல் உருவாக்கப்பட்ட இந்த மைதானம் 90களில் இதர மைதானங்களை காட்டிலும் உலகின் முன்னணி நாடுகள் பங்கேற்ற நிறைய முத்தரப்பு தொடர்களை நடத்தியது.

- Advertisement -

அதேபோல் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய சச்சினின் “டெசர்ட் ஸ்ட்ரோம்” இன்னிங்ஸ் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டிகளையும் நடத்திய பெருமை இந்த மைதானத்திற்கு உள்ளது. அந்த வகையில் இதுவரை 9 டெஸ்ட், 244 ஒருநாள், 28 டி20 போட்டிகள் என 281 போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ள இந்த மைதானம் இந்த புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க : IND vs PAK : பாகிஸ்தான் அணிக்கெதிரான சூப்பர்4 போட்டிக்கான இந்திய அணியின் – பிளேயிங் லெவன் இதோ

அந்த மைதானத்திற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானம் 280 போட்டிகளை நடத்தியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மைதானமாக போற்றப்படும் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் 278 போட்டிகளை நடத்தியுள்ளது.

Advertisement