
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணத்தில் சமன் செய்து அசத்தியது. அதிலும் கடைசி போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது மறக்க முடியாததாக அமைந்தது. முன்னதாக அந்தத் தொடரில் குல்தீப் யாதவ் கடைசி வரை விளையாடாதது நிறைய முன்னாள் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக அமைந்தது.
அதே போல 2021 முதல் பெஞ்சில் அமர்ந்து வரும் அபிமன்யு ஈஸ்வரனுக்கு இங்கிலாந்தில் வாய்ப்பு கிடைக்காதது பலரையும் பரிதாபமடைய வைத்தது. இந்நிலையில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைப்பது தாம் உட்பட பலருக்கும் சவாலாக இருப்பதாக சர்துள் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்திய அணியில் விளையாடுவதற்கு மிகப்பெரிய போட்டி நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதனாலேயே குல்தீப், ஈஸ்வரன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதனால் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்காக வெறும் 11 பேர் கொண்ட அணியில் விளையாட கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும் என்று தெரிவிக்கும் தாக்கூர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சில தருணங்களில் நானும் அதே படகில் இருந்தேன். எனது திறமையைக் காண்பிக்க வேண்டிய இந்திய அணியில் வருவதும் போவதுமாக இருந்தேன்”
“ஒரு வீரராக அப்படி நடக்கும் போது நிறைய உணர்வுகள் ஏற்படும் என்பதால் வெளியே அமர்ந்திருப்பது எளிது கிடையாது. ஒரு கட்டத்தில் உங்களுக்கு அலுப்புத்தட்டி நாட்டுக்காக விளையாடாத நான் இங்கே என்ன செய்கிறேன்? என்ற கேள்வி வரும். நாளின் இறுதியில் அதற்கு 2 காரணங்கள் இருக்கிறது. முதலில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை”
“2வது காரணம் என்னவெனில் இந்தியாவில் அதிகப்படியான போட்டி நிலவுகிறது. நிறைய வீரர்கள் இருந்தாலும் வெறும் 11 பேர் மட்டுமே விளையாட முடியும். இந்திய அணி நிர்வாகம் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் 11 வீரர்களை மட்டுமே எடுப்பார்கள். அப்போது நீங்கள் பிட்ச் சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் இன்று இந்த 11 பேர் வீரர்கள் மட்டுமே விளையாட முடியும், அதில் உங்களுக்கு இடமில்லை என்று உங்களுடைய மனதிற்கு சொல்ல வேண்டும்”
இதையும் படிங்க: இந்திய அணிக்கு கோச்சா மட்டும் தோனி எப்பவும் வரவே மாட்டாரு.. காரணத்தை கூறிய – ஆகாஷ் சோப்ரா
“அதனாலேயே நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று சொல்ல வேண்டும். அந்த வகையில் இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அல்லது இந்தியாவில் விளையாடும் போது நானும் அணியுடன் இருப்பதற்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன். பிளேயிங் லெவனில் தொடர்ச்சியாக இடம் கிடைக்காவிட்டாலும் அணியுடன் இருந்து மற்ற வீரர்கள் சாப்பிடும் அதே உணவை சாப்பிடுவதில் மகிழ்ச்சி இருக்கிறது” என்று கூறினார்.