அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் 2023 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்துவதற்கான இறுதிக்கட்ட வேலைகளை இந்தியா துவக்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை முதன்மை கிரிக்கெட் வீரர்கள் இல்லாமலேயே 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடைபெற்ற 3வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 200 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அந்த வெற்றிக்கு பந்து வீச்சில் வெறும் 6.3 ஓவரில் 37 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய சர்துல் தாக்கூர் மொத்தமாக 3 போட்டிகளையும் சேர்த்து 8 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். அதை விட கடந்த 2019 உலகக் கோப்பைக்கு பின் ஒருநாள் போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் அதிக விக்கெட்டுகளையும் எடுத்த இந்திய பவுலராக (53) அவர் சத்தமின்றி சாதனை படைத்து வருகிறார். ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணியில் சிறப்பாக செயல்பட்டதால் 2019க்குப்பின் நிலையான வாய்ப்புகளைப் பெற்ற அவர் 2021இல் ஆஸ்திரேலியாவில் பதிவு செய்த காபா வெற்றியிலும் இங்கிலாந்தின் லண்டன் ஓவலில் பதிவு செய்த வரலாற்று வெற்றியிலும் ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றினார்.
சான்ஸ் உறுதி:
மேலும் எதிரணி பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் போட்டால் உடைப்பது, ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து மேஜிக் நிகழ்த்துவது போன்றவைகளால் வெற்றிகளில் பங்காற்றும் அவரை ரசிகர்கள் லார்ட் எனவும் கொண்டாடுகின்றனர். இருப்பினும் விக்கெட்டுக்கு நிகராக ரன்களை வாரி வழங்குவது அவருடைய பிரச்சினையாக இருப்பதால் 2023 உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிராஜ், ஷமி போன்றவர்களுக்கு நிகரான பாராட்டுகளை எப்போதுமே பெறாத தாக்கூர் முழுவதுமாக வேகத்தை மட்டும் நம்பி ரன்களை வாரி வழங்கும் உம்ரான் மாலிக்கை விட சிறப்பாகவே செயல்படுவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார்.
எனவே 2023 உலகக்கோப்பையில் 4வது வேகப்பந்து வீச்சாளர் இடத்தை தாக்கூர் பிடித்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “நீங்கள் லார்ட் தாக்கூரை நிறைய பாராட்ட வேண்டும். ஏனெனில் அவர் 2019 உலகக்கோப்பைக்கு பின் இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்துள்ளார். இந்த நிலைமையில் உலகக்கோப்பை அணியில் ஒரு காலியிடமும் இருக்கிறது. அதாவது பும்ரா, ஷமி மற்றும் சிராஜ் ஆகியோருக்கு பின் யார் 4வது வேகப்பந்து வீச்சாளராக இருப்பார் என்ற கேள்வி இருந்து வருகிறது”
“அந்த கேள்விக்கு தற்போதைய நிலைமையில் தாக்கூர் பதிலாக இருப்பது போல் தெரிகிறது. ஏனெனில் அந்த பட்டியலில் உம்ரான் மாலிக் திடீரென சரிவை சந்தித்துள்ளார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அசத்தியதால் நாம் அவரை பாராட்டினோம். ஆனால் தற்போதைய நிலைமையில் உலக கோப்பையில் தாக்கூருக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. மேலும் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரின் 2வது போட்டியிலும் அவர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அப்படி சிறப்பாக பந்து வீசும் விதத்திற்கு அவர் குறைவான பாராட்டுகளையே பெற்று வருகிறார்”
“அத்துடன் அவர் எப்படி ரன்களை வாரி வழங்கினாலும் விக்கெட்டுகளையும் எடுக்கிறார் என்பதை நான் கண்டறிய முயற்சிக்கிறேன். ஏனெனில் இரண்டுமே சரிக்கு சமமாக இருக்கிறது. ஒருவேளை அவர் 3 விக்கெட்டுகளை எடுத்தால் எக்கனாமி ஒரு பிரச்சினையாக இருக்காது. ஏனென்றால் 300 ரன்களே நம்முடைய பவுலர்களுக்கான இலக்காக இருக்கும். மேலும் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் கொடுக்காமல் இருந்தாலே அவருக்கு இன்னும் விக்கெட்டுகள் கிடைக்க அதிக வாய்ப்பு ஏற்படும்”
இதையும் படிங்க:உம்ரான் மாலிக்கை விட எவ்ளோவோ பரவால்ல, அவர் 2023 உ.கோ வாய்ப்பை கன்ஃபார்ம் பண்ணிட்டாரு – ஆகாஷ் சோப்ரா பாராட்டு
“ஆனாலும் அவர் இந்த விக்கெட்டுகளை அதிர்ஷ்டத்தால் எடுக்கிறார் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். இருப்பினும் அவர் விக்கெட்கள் விழக்கூடிய இடங்களில் தன்னம்பிக்கையுடன் தைரியமாக பந்து வீசுவதாலே கிடைக்கிறது. குறிப்பாக அவரிடம் நீங்கள் எந்தளவுக்கு சிறந்தவர் என்று கேட்டால் நான் டென்னிஸ் லில்லிக்கு நிகரானவர் என்று பதிலளிப்பார். அந்தளவுக்கு தன்னம்பிக்கை கொண்டுள்ள அவரை நானும் விரும்புகிறேன்” என்று கூறினார்.