கையில் ஹாட்ரிக் அடி வாங்கியும் இந்தியாவை காப்பாற்றிய தாக்கூர் – ரகானேவுடன் சேர்ந்து வரலாற்று சாதனை

Thakur 51
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 7ஆம் தேதி துவங்கிய 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மாபெரும் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுக்க சுமாராக பந்து வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ரோகித் சர்மா 15, கில் 13, விராட் கோலி 14, புஜாரா 14 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 71/4 என ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியாவை 5வது விக்கெட்டுக்கு ரகானேவுடன் இணைந்து காப்பாற்ற போராடிய ரவீந்திர ஜடேஜாவும் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் காரணமாக 2வது நாளின் முடிவில் 151/5 என தடுமாறிய இந்தியா ஃபாலோ ஆனை தவிர்ப்பதற்கு 119 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் இன்று துவங்கிய 3வது நாளின் 2வது பந்திலேயே 5 ரன்னில் கேஎஸ் பரத் கிளீன் போல்ட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் அடுத்ததாக வந்த சர்துல் தாக்கூர் மறுபுறம் நங்கூரமாக ரகானேவுடன் இணைந்து நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தி போராடினார்.

- Advertisement -

அதில் ஆரம்பத்திலேயே பட் கமின்ஸ் வீசிய நோ-பால் அதிர்ஷ்டத்தை பயன்படுத்திய ரகானே தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்து சிக்ஸருடன் அரை சதமடித்தார். அதன் வாயிலாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அரை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையும் அவர் படைத்தார். இதற்கு முன் 2021 ஃபைனலில் நியூசிலாந்துக்கு எதிராக இதே ரகானே 49 (117) ரன்கள் எடுத்ததே முந்தைய அதிகபட்ச ஸ்கோராகும். அந்த வகையில் தொடர்ந்து பேட்டிங் செய்த அவர் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் ஆஸ்திரேலியாவும் சில கேட்ச்களை தவற விட்டது.

அதே போல மறுபுறம் அவருக்கு உறுதுணையாக நின்ற சர்துள் தாக்கூர் தமது ஸ்டைலில் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்தார். இருப்பினும் பட் கமின்ஸ் வீசிய 42வது ஓவரில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆகி வந்த பந்தை தவறாக கணித்த அவர் இடது கையில் அடி வாங்கினார். அதனால் வலியைப் பொறுத்துக் கொண்டு அடுத்த பந்தை எதிர்கொண்ட அவர் மீண்டும் அதே போல அடி வாங்கியதால் உடனடியாக அணி மருத்துவர் வந்து சோதித்து தேவையான முதலுதவிகளை கொடுத்தார்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த அவர் மீண்டும் 3வது முறையாக அதே போல அடி வாங்கியும் நல்ல வேளையாக இம்முறை பாதுகாப்பு உபகரணம் அணிந்திருந்ததால் தப்பித்தார். அந்த வகையில் இரும்பு மனிதனாக பேட்டிங் செய்த அவருடன் மறுபுறம் அசத்திய ரஹானே உணவு இடைவெளிக்கு முன் 89 ரன்கள் எடுத்ததால் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் உணவு இடைவெளிக்குப்பின் களமிறங்கிய அவர் கேமரூன் கிரீன் அற்புதமான கேட்ச்சால் மேற்கொண்டு ரன்கள் எடுக்காமல் 11 பவுண்டரி 1 சிக்ஸருடன் 89 (129) ரன்களில் ஏமாற்றத்துடன் அவுட்டாகி சென்றது ரசிகர்களை சோகமடைய வைத்தது.

இருப்பினும் 6வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை தாக்கூருடன் இணைந்து படைத்தார். இதற்கு முன் கடந்த ஃபைனலில் விராட் கோலி – புஜாரா மற்றும் இந்த ஃபைனலில் ரகானே – ஜடேஜா ஆகியோர் தலா 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய அதிகபட்ச ரன்களாகும்.

- Advertisement -

அந்த நிலைமையில் மறுபுறம் தொடர்ந்து அசத்திய தாக்கூரும் ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் வீசிய நோ-பால் அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி 6 பவுண்டரியுடன் அரை சதமடித்து 51 (109) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். குறிப்பாக ஃபாலோ ஆனை தவிர்க்க உதவிய அவர் விராட் கோலி, புஜாரா, ரோகித் சர்மா போன்ற டாப் பேட்ஸ்மேன்களை விட சிறப்பாகவே செயல்பட்டார்.

இதையும் படிங்க: வீடியோ : கையில் ஹாட்ரிக் அடி வாங்கியும் இந்தியாவை காப்பாற்றிய தாக்கூர் – ரகானேவுடன் சேர்ந்து வரலாற்று சாதனை

இறுதியில் அடுத்து வந்த ஷமி 13 (11) ரன்களில் அவுட்டானதால் 296 ரன்களுக்கு இந்தியாவை சுருட்டிய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கமின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஸ்டார்க், போலண்ட், க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். அதனால் 173 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய துவங்கியுள்ளது.

Advertisement