மிரட்டிய ஆர்சிபி, பதிலுக்கு தெறிக்கும் பேட்டிங் செய்து ஜோஸ் பட்லருக்கு நிகராக கொல்கத்தாவை காப்பாற்றிய லார்ட் தாகூர்

Shardhul Thakur
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 6ஆம் தேதியன்று உலக புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. தன்னுடைய முதல் போட்டியில் பஞ்சாப்பிடம் தோல்வியை சந்தித்ததால் இந்த போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு ரஹ்மத்துல்லா குர்பாஸ் அதிரடியாக ரன்களை எடுத்தாலும் மறுபுறம் தடுமாறிய வெங்கடேஷ் ஐயரை 4வது ஓவரின் 4வது பந்தில் 3 (7) ரன்களில் கிளீன் போல்டாக்கிய டேவிட் வில்லி அடுத்து வந்த மந்திப் சிங்கையும் அடுத்த பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாக்கி மிரட்டினார். அதனால் ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு பொறுப்புடன் விளையாட வேண்டிய கேப்டன் நித்திஷ் ராணாவும் 1 (5) ரன்னில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார்.

- Advertisement -

அதன் காரணமாக 47/3 என தடுமாற்றமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அந்த வந்த ரிங்கு சிங்குடன் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 42 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு மீட்டெடுத்த ரஹ்மத்துல்லா குர்பாஸ் அரை சதமடித்து 6 பவுண்டரி 3 சிக்சருடன் 57 (44) ரன்கள் எடுத்திருந்த போது கரன் சர்மாவின் சுழலில் சிக்கினார். அந்த நிலையில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரசல் கொஞ்சமும் பொறுப்புடன் நிதானத்தை காட்டாமல் அடுத்த பந்திலேயே சிக்ஸர் அடிக்க முயற்சித்து விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக் அவுட்டாகி சென்றார்.

அதனால் 89/5 என திணறிய அந்த அணியை அடுத்து களமிறங்கிய ஷார்துல் தாகூர் ஆனதாகட்டும் என்ற வகையில் அதிரடியாக விளையாடி மீட்டெடுக்க போராடினார். பொதுவாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய நாளில் சச்சின் டெண்டுல்கர், மைக்கேல் ஹசி போல அற்புதமாக பேட்டிங் செய்யும் திறனை கொண்டுள்ள அவருக்கு இன்றைய நாள் அது போன்ற ஒரு நாளாக அமைந்தது என்றே சொல்லலாம்.

- Advertisement -

ஏனெனில் களமிறங்கியது முதலே கொஞ்சம் கூட தடுமாறாமல் அதிரடியை துவக்கிய அவர் டேவிட் வில்லி போன்ற பவுலர்களை அசால்டாக பவுண்டரிகளாக பறக்க விட்டு வெறும் 20 பந்திலேயே ஐபிஎல் தொடரில் தன்னுடைய முதல் அரை சதமடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். குறிப்பாக இந்த சீசனில் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற ஜோஸ் பட்லரின் சாதனை சமன் செய்த அவர் பெங்களூரு அணியை தெறிக்க விட்டார்.

அவருடன் பெயருக்காக பேட்டிங் செய்த ரிங்கு சிங் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 5வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொல்கத்தாவை மீட்டெடுத்து 2 பவுண்டரி 3 சிக்சருடன் 46 (33) ரன்கள் குவித்து 19வது ஓவரில் அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் பெங்களூருவுக்கு சிம்ம சொப்பனமாக மாறி 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 68 (29) ரன்களை 234.48 என்ற தெறிக்க விடும் ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசிய ஷார்துல் தாகூர் கொல்கத்தாவை முழுமையாக காப்பாற்றி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இறுதியில் உமேஷ் யாதவ் தனது பங்கிற்கு 1 பவுண்டரியுடன் 6* (2) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் கொல்கத்தா 204/7 ரன்கள் சேர்த்து அசத்தியது. அப்படி பந்து வீச்சில் வீச்சில் கடைசி 10 ஓவர்களில் ரன்களை வாரி வழங்கிய பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக டேவிட் வில்லி மற்றும் கரண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையும் படிங்க: IPL 2023 : அஷ்வின், படிக்கல் இல்ல – தோல்விக்கு தெரிஞ்சே செஞ்ச அந்த தப்பு தான் காரணம் – சாம்சன் கேப்டன்ஷிப்பை விமர்சிக்கும் சேவாக்

ஆனால் பெங்களூருவை அடித்து நொறுக்கும் அளவுக்கு அற்புதமான பேட்டிங் செய்து கொல்கத்தாவை ஜோஸ் பட்லருக்கு நிகரான சாதனையுடன் காப்பாற்றிய தாகூரை தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் லார்ட் என கொண்டாடி வருகிறார்கள்.

Advertisement