இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இத்தனைக்கும் அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 556 ரன்கள் குவித்ததால் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தானை விட அபாரமாக விளையாடிய இங்கிலாந்து 823-7 ரன்கள் குவித்து அந்நாட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக உலக சாதனை படைத்தது.
அத்துடன் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தானை 220 ரன்கள் சுருட்டிய இங்கிலாந்து அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 500 ரன்கள் அடித்தும் கடைசியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த முதல் அணியாக பாகிஸ்தான் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது.
சுயநலம், பிரிவினை:
இது போக சமீபத்தில் வங்கதேசத்திடம் முதல் முறையாக தோற்ற பாகிஸ்தான் ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் மண்ணை கவ்வியது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் சுயநலம், பிரிவினை ஆகியவை ஏற்பட்டுள்ளதே தோல்விக்கு காரணம் என்று முன்னாள் வீரர் சோயப் அக்தர் வேதனை தெரிவித்துள்ளார். அதனால் பாகிஸ்தான் அணியிடமிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அந்தஸ்து தடை செய்து பறிக்கலாமா என்று ஐசிசி யோசிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை அறுவடை செய்வீர்கள். பல தசாப்தங்களாக நமது அணி சரிவை சந்தித்து வருவது ஏமாற்றமாக உள்ளது. தோற்றது பரவாயில்லை. ஆனால் அந்த தோல்வி நெருக்கமாக இருக்க வேண்டும். கடந்த 2 வருடங்களில் பார்த்ததை விட பாகிஸ்தான் அணி முற்றிலும் நம்பிக்கையை கைவிட்டுள்ளனர்”
டெஸ்ட் உரிமை:
“இது நாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு போதுமானவர்கள் இல்லை என்பதை காட்டுகிறது. இங்கிலாந்து 800+ ரன்கள் அடித்தது. வங்கதேசமும் உங்களை வீழ்த்தியது. இதனால் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்று ரசிகர்கள் சொல்வதை நான் பார்க்கிறேன். பாகிஸ்தானுக்கு மற்ற அணிகளை அனுப்பி அவர்களின் டெஸ்ட் அந்தஸ்தை காப்பாற்ற வேண்டுமா? என்று ஐசிசியும் யோசிக்கும்”
இதையும் படிங்க: எமர்ஜிங் ஆசிய கோப்பை 2024: தமிழக வீரருக்கு இடம்.. திலக் வர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
“இந்த நிலைமை வலியையும் ஏமாற்றத்தையும் கொடுக்கிறது. பாகிஸ்தான் வாரியம் இதை சரி செய்ய வேண்டும். உங்களுடைய கேப்டன் பலவீனமாக இருந்தால் அணியில் பிரிவினை ஏற்படும். கேப்டன் சுயநலமாக இருந்தாலும் பிரிவினை ஏற்படும். அணியை தேர்ந்தெடுப்பது கேப்டனின் முடிவாக இருக்க வேண்டும். அந்த கலாச்சாரம் தான் நாங்கள் விளையாடும் காலத்தில் இருந்தது” என்று கூறினார்.



