சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி நேற்று ஆர்.சி.பி அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த நடப்பு 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் எட்டாவது லீக் போட்டியில் 9-வது வீரராக பேட்டிங் செய்ய களமிறங்கியது பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியானது சென்னை அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெடுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது.
தோனி முன்கூட்டியே வந்திருக்க வேண்டும் : ஷேன் வாட்சன்
இதன் காரணமாக 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி ஒரு கட்டத்தில் 80 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்த போது எட்டாவது வீரராக தோனி உள்ளே வராமல் அவருக்கு முன்னதாக அஸ்வினை அனுப்பினார். அதன் பிறகு ஒன்பதாவது வீரராக களமிறங்கிய அவர் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அசத்தினாலும் அது கடைசி நேரத்தில் வந்ததால் அவரது ஆட்டம் வீணானது.
ஒருவேளை அஸ்வினுக்கு முன்னதாகவே தோனி களமிறங்கி இருந்தால் நிச்சயம் சென்னை அணி போட்டியில் இன்னும் நெருக்கமாக சென்றிருக்கக் கூட வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இப்படி தோனி ஒன்பதாவது இடத்தில் களமிறங்கியது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் விமர்சித்து வரும் வேளையில் தற்போது தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சனும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தோனி களத்திற்கு வந்து விளையாட வேண்டும் என்பதை பார்க்கத்தான் சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் மைதானத்திற்கு வருகிறார்கள். அவர் இன்னும் முன்கூட்டியே களமிறங்கி இருந்தால் நிச்சயம் தனிப்பட்ட வகையிலும் எனக்கு அது மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
என்னுடைய கருத்தின் படி நேற்றைய போட்டியில் தோனி அஸ்வினுக்கு முன்னதாகவே களமிறங்கியிருந்தால் கூடுதலாக 15 முதல் 20 பந்துகளை அவரால் எதிர்கொண்டு இருந்திருக்க முடியும். கடந்த சில ஆண்டுகளாக மிகச் சிறப்பாக விளையாடி வரும் அவர் இந்த தொடரிலும் நன்றாகத்தான் விளையாடுகிறார். ஆனாலும் முன்கூட்டியே அவர் களமிறங்கினால் அவரது திறமையை முழுவதுமாக வெளிக்கொண்டு வரலாம்.
இதையும் படிங்க : 17 இன்னிங்ஸ்களில் இதுவே முதல்முறை.. சேப்பாக்கத்தில் சறுக்கிய ருதுராஜ் கெய்க்வாட் – என்ன நடந்தது?
ஏற்கனவே அவர் அனைத்தையும் நிரூபித்து விட்டாலும் தற்போதும் அவரிடம் மிகச் சிறப்பாக விளையாடக்கூடிய திறன் இருக்கிறது. எனவே என்னை பொருத்தவரை இனிவரும் போட்டிகளில் இந்த தவறை செய்யாமல் அணிக்கு தேவைப்படும் பட்சத்தில் முன்னதாகவே வந்து பேட்டிங் செய்ய களமிறங்கினால் அது நிச்சயம் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கும் உதவும் என வாட்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.



