ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது முதல் போட்டியில் மும்பையை தோற்கடித்தது. அதே போல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தாவை தோற்கடித்து அசத்தியது. அந்த வகையில் தொடரை வெற்றிகரமாக துவங்கிய அவ்விரு அணிகளும் மார்ச் 28ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் மோதுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரலாற்றில் பெங்களூரு அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி வெற்றிகரமாக செயல்பட்டு நிறைய வெற்றிகளை குவித்துள்ளது. குறிப்பாக இதே சேப்பாக்கத்தில் நடைபெற்ற 2011 இறுதிப் போட்டியில் பெங்களூரு அணியை தோற்கடித்து சென்னை கோப்பையை வென்றதை மறக்க முடியாது. எனவே இம்முறையும் பெங்களூரு அணியை தோற்கடித்து 2வது வெற்றியைப் பெற சிஎஸ்கே அணி தயாராகி வருகிறது.
சென்னையின் கோட்டை:
மறுபுறம் ரஜத் படிதார் தலைமையில் புதியப் பயணத்தை துவங்கியுள்ள ஆர்சிபி அணி இம்முறை சென்னையை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைக்க தயாராக உள்ளது. இந்நிலையில் சேப்பாக்கத்தின் சுழலுக்கு சாதகமான ஆடுகளத்துக்கு தகுந்தார் போல் பெங்களூரு தங்களது அணியில் சில மாற்றங்கள் செய்யக்கூடும் என்று ஷேன் வாட்சன் கூறியுள்ளார். ஆனால் மொத்த சிஎஸ்கே அணியும் சேப்பாக்கத்தில் வெற்றிப் பெறுவதற்கு தகுந்தார் போல் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே சிஎஸ்கே அணியை அவர்களுடைய கோட்டையான சேப்பாக்கத்தில் பெங்களூரு வீழ்த்துவது கடினம் என்று தெரிவிக்கும் வாட்சன் இது பற்றி ஜியோ ஹாட்ஸ்டார் சேனலில் பேசியது பின்வருமாறு. “சேப்பாக்கத்திற்கு செல்வது ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய சவால். ஏனெனில் சிஎஸ்கே அணியில் தரமான பவுலர்கள் இருக்கிறார்கள். சிஎஸ்கே அணியின் பலத்திற்கு பதிலடி கொடுக்க ஆர்சிபி தங்களது அணியில் அட்ஜெஸ்ட் செய்வார்கள்”
வாட்சன் கருத்து:
“ஆனால் சிஎஸ்கே அணியின் கோட்டை சேப்பாக்கத்தில் எந்தத் தவறும் செய்யாதீர்கள். மொத்த சிஎஸ்கே அணியும் சென்னையில் அசத்துவதற்கு தகுந்தாற்போல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய 3 ஸ்பின்னர்கள் அஸ்வின், ஜடேஜா, நூர் அஹ்மத் மும்பைக்கு எதிரான ஓப்பனிங் போட்டியில் எப்படி பவுலிங் செய்தார்கள் என்பதைப் பாருங்கள்”
இதையும் படிங்க: பி.சி.சி.ஐ வருடாந்திர ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள் – பின்னடைவை சந்திக்கப்போகும் சீனியர்கள்
“இந்த பிட்ச்சில் அவர்கள் உண்மையில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள். சென்னை அணிக்காக தனது முதல் போட்டியிலேயே நூர் அஹ்மத் ஆட்டநாயகன் விருது வென்றது அவர்களுடைய தன்னம்பிக்கையை அதிகரித்திருக்கும்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2008க்குப்பின் பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



