பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த தொடரின் முதல் போட்டி அக்டோபர் 7ஆம் தேதி முல்தான் நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு சாய்ம் ஆயுப் 4 ரன்களில் அவுட்டானார்.
இருப்பினும் அடுத்து வந்த கேப்டன் சான் மசூத் மற்றொரு துவக்க வீரர் அப்துல்லா ஷபிக்குடன் சேர்ந்து நிதானமாக விளையாடினார். அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு 253 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் இருவருமே சதமடித்தனர். அதில் அப்துல்லா சபிக் 102 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.
1524 நாட்கள் கழித்து:
அதே போல மறுபுறம் இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்து அசத்தலாக விளையாடிய கேப்டன் மசூத் சதமடித்து 151 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 1524 நாட்கள் 67 இன்னிங்ஸ் கழித்து ஒரு வழியாக ஷான் மசூத் சதம்டித்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். கடைசியாக இதே இங்கிலாந்துக்கு எதிராக 2020ஆம் ஆண்டு முன்பாக மான்செஸ்டரில் அவர் சதம் அடித்திருந்தார்.
அவர்களைத் தொடர்ந்து நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாம் பேட்டிங் செய்ய வந்தார். சமீப காலங்களில் சுமாராக விளையாடி பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமான அவர் ஃபார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதனால் இப்போட்டியில் நிதானமாக விளையாடிய அவர் 71 பந்துகளை எதிர்கொண்டு மிகவும் மெதுவாகவே விளையாடினார்.
தூங்கிய ரசிகர்கள்:
அவருடைய ஆட்டத்தை பார்த்த சில ரசிகர்கள் சுவாரசியம் இல்லாததால் மைதானத்திலேயே தூங்கியதை கேமராமேன் படம் பிடித்து காண்பித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 30 ரன்களில் அவுட்டாகி சென்றார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 651 நாட்களாக 17 இன்னிங்ஸில் பாபர் அசாம் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் தடுமாறுவது தொடர்கிறது
இதையும் படிங்க: 6 வீரர்கள் மட்டும்.. 7 வருடம் கழித்து வரும் புதுமையான ஹாங்காங் சிக்ஸ் தொடர்.. இந்தியா பங்கேற்கும் விவரம்
இறுதியில் நிறைவுக்கு வந்த முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 328-4 ரன்கள் எடுத்து வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. அந்த அணிக்கு களத்தில் சவுத் ஷாக்கில் 35*, நாசீம் ஷா 0* ரன்களுடன் உள்ளனர். மறுபுறம் காயத்தால் பென் ஸ்டோக்ஸ் இல்லாமல் விளையாடும் இங்கிலாந்து விரைவாக பாகிஸ்தானை அவுட் செய்ய போராடி வருகிறது.



