ஹாங்காங் கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஹாங்காங் சிக்ஸ் தொடர் வரும் நவம்பர் 1 – 3 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கிரிக்கெட்டில் புதுமையை புகுத்தி ரசிகர்களை மகிழ்விப்பதற்காக இந்த தொடர் கடந்த 1993ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ஒரு அணியில் மொத்தம் ஆறு வீரர்கள் மட்டுமே விளையாடும் இந்தத் தொடர் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்டது.
அதில் ஒரு போட்டியில் ஒவ்வொரு அணியில் உள்ள விக்கெட் கீப்பரை தவிர்த்து எஞ்சிய 5 வீரர்களும் 5 ஓவர்கள் வீச வேண்டும். அதுவே ஃபைனலாக இருந்தால் 8 பந்துகளை கொண்ட 5 ஓவர்கள் வீச வேண்டும். இந்த தொடரில் ஒய்ட் மற்றும் நோபால் 2 ரன்கள் கருதப்படும். அதே போல 31 ரன்களை தொட்டுவிட்டால் அந்த பேட்ஸ்மேன் ரிட்டையர்ட் நாட் அவுட்டாகி செல்ல வேண்டும்.
புதுமையான தொடர்:
ஒவ்வொரு போட்டியிலும் வெல்லும் அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும். இறுதியில் அதிக புள்ளிகள் பெறும் 2 அணிகள் ஃபைனலில் மோதும் என்ற வகையில் இத்தொடரின் ஃபார்மட் வித்தியாசமான விதிமுறைகளைக் கொண்டது. இம்முறை மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்தியாவும் விளையாட உள்ளதாக ஹாங்காங் வாரியம் அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் இந்த தொடரில் இந்தியாவுக்காக சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி ஆகியோர் விளையாடி உள்ளனர். அதே போல உலக அளவில் பிரைன் லாரா, ஷேன் வார்னே பல ஜாம்பவான் வீரர்கள் தங்களுடைய நாட்டுக்காக விளையாடியுள்ளனர். அந்த வகையில் வரலாற்றில் இந்த தொடர் மொத்தம் 18 முறை நடந்துள்ளது.
இந்தியா பங்கேற்பு:
அதில் அதிகபட்சமாக இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் 5 கோப்பைகளை வென்றுள்ளது. இந்தியா இந்த தொடரில் 2005ஆம் ஆண்டு ஃபைனலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து ராபின் சிங் தலைமையில் கோப்பையை வென்றது. கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த தொடர் தற்போது 7 வருடங்கள் கழித்து மீண்டும் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: எங்களுக்கு இதுவே தெரியல.. 140 – 150க்கு பழகுனா எப்படி இந்தியாவை ஜெய்க்க முடியும்.. வங்கதேச கேப்டன் பேட்டி
அந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் டாப் அணிகள் விளையாடும் என்று ஹாங்காங் வாரியம் அறிவித்துள்ளது. சொல்லப்போனால் இந்த தொடருக்காக தங்களுடைய அணியை பாகிஸ்தான் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதே போல இந்தியாவும் விரைவில் தங்களுடைய அணியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



