
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி தற்போது ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஐந்து நாட்கள் முடிவடைந்துள்ள இந்த போட்டி இரண்டு நாட்கள் மழை காரணமாக தடைபட்டதால் தற்போது இன்று 6வது நாள் ரிசர்வ் டே போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெறவே இரு அணிகளும் நினைக்கும்.
இதன் காரணமாக இன்று கடைசி நாள் போட்டி சுவாரசியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. நேற்று ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் குவித்து இருக்கும் இந்திய அணி இன்று அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டு நியூசிலாந்து அணி கட்ட முயற்சிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய கடைசி நாள் போட்டியில் இந்திய அணியின் திட்டம் என்ன என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இன்றைய கடைசி நாளில் இந்திய அணி முதலில் ரன்களை குவிக்க வேண்டும். ரன்களைக் குவித்து நம்மை பாதுகாப்பான நிலையில் வைத்துக்கொண்ட பிறகே வெற்றி குறித்து யோசிப்போம் என முகமது ஷமி கூறியுள்ளார்.
அவர் கூறியதன் அடிப்படையில் பார்க்கையில் இந்திய அணி முதலில் பேட்டிங்கில் ரன்கள் எடுத்தால் மட்டுமே அவர்களை எளிதில் சுருட்ட முடியும் இல்லையெனில் போட்டி எதிர்மறையாக அமையும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.