இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் ஆட்டமானது இன்று டெல்லி அருண் ஜேட்லீ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும், குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 279 ரன்களை குவித்தது. இலங்கை அணி சார்பாக அசலங்கா 108 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் 280 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது 41.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் குவித்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வங்கதேச அணி சார்பாக நஜ்முல் ஷாண்டோ 90 ரன்களையும், ஷாகிப் அல் ஹசன் 82 ரன்கள் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கூறுகையில் : டாசில் வெற்றி பெறும் போதே பந்து வீசவேண்டும் என்பதை தயங்காமல் தேர்வு செய்தேன்.
ஏனெனில் நாங்கள் ஏற்கனவே இந்த மைதானத்தில் விளையாடியுள்ளோம் டியூ இந்த மைதானத்தில் வரும் என்பதனாலே இந்த முடிவை எடுத்தோம். இந்த போட்டியில் எனக்கும் ஷாண்டோவுக்கும் பார்ட்னர்ஷிப் அருமையாக இருந்ததால் நாங்களே போட்டியை முடிக்க நினைத்தோம்.
அதேபோன்று மேத்யூஸ் விக்கெட்டை அம்பயரிடம் நான் முறையிட செல்வதற்கு முன்னதாக எங்கள் அணியில் இருந்த வீரர்களில் ஒருவர் என்னிடம் வந்து கொடுக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பேட்ஸ்மேன் நேரத்தை எடுத்துக் கொண்டார் எனவே அம்பயரிடம் முறையிடுங்கள் இது அவுட் தான் என்று சொன்னார். அதன்பிறகே நானும் அம்பயரிடம் சென்று அப்பீல் செய்தேன்.
இதையும் படிங்க : டைம் ஆச்சு கிளம்புங்க.. வங்கதேச கேப்டனை.. பழி தீர்த்த மேத்யூஸ்.. ஆறுதல் வெற்றிக்கு இவ்வளவு போராட்டமா?
இது விதிமுறைகளில் ஒன்று தான். எனவே நான் அவரை அவுட் என்று அம்பயரிடம் கேட்டது சரியா? தவறா? என்றெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. என்னுடைய முடிவு அணியின் வெற்றிக்கு உதவும் என்பதனாலே அதனை எடுத்தேன். இதில் சரி தவறு என்று பேசுவதற்கு எதுவும் கிடையாது அனைத்துமே விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் இருக்கிறது என்று ஷாகிப் அல் ஹசன் கூறியது குறிப்பிடத்தக்கது.