வங்கதேசத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் சாகிப் அல் ஹசன் கிரிக்கெட்டைப் பொறுத்த வரை மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக போற்றப்படுகிறார். குறிப்பாக கடந்த 10 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் ஆல் ரவுண்டராக அசத்திய அவர் வங்கதேசத்தில் நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். ஆனால் ஒரு மனிதராக அவர் மிகவும் மோசமானவராகவும் கோபமானவராகவும் இருந்து வருகிறார் என்றால் மிகையாகாது.
ஏனெனில் நடுவர்கள் தவறாக தீர்ப்பு வழங்கினாலும் அதை மதித்து வெளியேறுவது ஒவ்வொரு வீரர்களின் கடமையாகும். அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் உட்பட உலகின் எத்தனையோ ஜாம்பவான் வீரர்கள் நடுவர்கள் தவறான தீர்ப்பே வழங்கினாலும் அமைதியாக சென்று கிரிக்கெட்டை மதித்த கதைகள் ஏராளம்.
திமிரான ஷாகிப்:
ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற சாதாரண உள்ளூர் தொடரில் தமக்கு சாதகமான தீர்ப்பு வழங்கவில்லை என்பதற்காக நடுவர் முன்பிருந்த ஸ்டம்பை எட்டி உதைத்து பிடுங்கி எறிந்த ஷாகிப் அவரை மோசமான வார்த்தைகளால் திட்டியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. அந்த நிலைமையில் கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் மேத்யூஸ் ஹெல்மெட் பழுதானதால் அதை மாற்ற முயற்சித்தார்.
அப்போது வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக நடுவர்களிடம் சொன்ன ஷாகிப் அல் ஹசன் விடாப்பிடியாக நின்று நேர்மை தன்மையையும் மனசாட்சியையும் பற்றி நினைக்காமல் மேத்யூஸை அவுட் கொடுக்குமாறு கேட்டு வாங்கியது மற்றுமொரு மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இந்நிலையில் வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் சமீபத்தில் போட்டியிட்ட சாகிப் அல் ஹசன் அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
அதற்காக தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது வழக்கம் போல நிறைய ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செஃல்பி எடுக்க முயற்சித்தார்கள். அப்போது ஒரு ரசிகர் அவரை மிகவும் நெருங்கி புகைப்படம் எடுத்துக் கொள்ள முயற்சித்தார். ஆனால் அதற்காக கோபப்பட்ட சாகிப் அந்த ரசிகரின் கன்னத்தில் பளார் என வேகமாக அறைந்து விட்டு அங்கிருந்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சீட்டுல எழுதி தரேன்.. பாண்டியா வந்தாலும் ரோஹித் தான் 2024 டி20 உ.கோ கேப்டன்.. முன்னாள் வீரர் கணிப்பு
இது மட்டுமல்லாமல் மற்றுமொரு தேர்தல் விழா மேடையில் அமர்ந்திருந்த சாகிப்பை நிறைய பெண் ரசிகர்கள் செஃல்பி எடுத்துக் கொள்ள முயற்சித்தனர். அப்போது வேண்டா வெறுப்பாக இதெல்லாம் தலையெழுத்து என்பது போல் அமர்ந்திருந்த சாகிப் கொட்டாவி விட்டு அங்கிருந்து ரசிகர்களுக்கு மரியாதை கொடுக்காமல் நடந்து கொண்ட வீடியோவும் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்றதுமே எங்களை மறந்து திமிராக நடந்து கொள்கிறீர்களா நீங்கள் எல்லாம் மனிதரா என்று ரசிகர்கள் தற்போது அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.