எதிர்க்காலம் ஆனா அவர் சொல்றதுல என்ன தப்பு இருக்கு, நம்ம நிலைமையை யோசிச்சு பாருங்க – அஷ்வின் கருத்துக்கு அப்ரிடி பதில்

Shahid Afridi Ravichandran Ashwin
- Advertisement -

2023 ஆசிய கிரிக்கெட் கோப்பையை எங்கே நடத்துவது என்பதில் கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே எல்லை பிரச்சனை காரணமாக இவ்விரு அணிகளும் இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலக கோப்பையில் மட்டுமே மோதி வருகின்றன. அந்த நிலையில் 2023 ஆசிய கோப்பை நடத்துவதற்கான உரிமையை பாகிஸ்தான் வாங்கியிருந்தாலும் எல்லை பிரச்சனை காரணமாக இந்திய அரசின் அனுமதியின்றி அந்நாட்டுக்கு சென்று இந்தியா பங்கேற்காது என கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளிப்படையாக அறிவித்தார்.

Jay Shah IND vs PAk

- Advertisement -

அத்துடன் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருக்கும் அவர் அத்தொடரை பொதுவான இடத்தில் நடத்துவதற்கான அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் வாரியம் எங்களது நாட்டுக்கு நீங்கள் வரவில்லை என்றால் உங்களது நாட்டில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று அதிரடியாக அறிவித்தது. அதை உறுதிப்படுத்திய முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா பதவி விலகுவதற்கு முன்பாக இந்தியாவை கடுமையாக விமர்சித்தார். அவருக்குப் பின் புதிய தலைவராக பொறுப்பேற்ற நஜாம் சேதி கடந்த மாதம் பக்ரைனில் நடைபெற்ற ஆசிய கவுன்சில் கூட்டத்தில் அதை நேரடியாகவே ஜெய் ஷா’விடம் எச்சரித்ததாக செய்திகள் வெளியானது.

நிலைமையை யோசிங்க:
அந்த நிலைமையில் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர்களால் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையை புறக்கணிப்பது என்பது அசாத்தியமற்றது என இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் பதிலடி கொடுத்திருந்தார். ஏனெனில் உலகக்கோப்பையை புறக்கணித்தால் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம் என்பதுடன் அதற்காக ஐசிசியிடம் இருந்து கிடைக்க வேண்டிய பங்கு பணத்தையும் பாகிஸ்தான் இழக்க நேரிடும் என்று தெரிவித்த அவர் பேசாமல் ஆசியக் கோப்பையை இலங்கையில் நடத்தலாம் என்று ஆலோசனை தெரிவித்தார்.

Ashwin

இந்நிலையில் என்னதான் இந்தியாவுக்கு நாம் செல்லக்கூடாது என்று உணர்வுபூர்வமாக தெரிவித்தாலும் தற்போதைய பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு சென்று பாகிஸ்தான் விளையாடுவதே சரியான முடிவாக இருக்கும் என்று தேர்வுக்குழு தலைவர் சாகித் அப்ரிடி கூறியுள்ளார். குறிப்பாக அஷ்வின் கூறிய இந்த கருத்து பற்றி பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“யாராக இருந்தாலும் தங்களது சொந்த காலில் நிற்க தடுமாறினால் அவர்களால் வலுவான முடிவுகளை எடுப்பது மிகவும் கடினமாகும். அவர்கள் பல அம்சங்களை பார்க்க வேண்டும். இந்தளவுக்கு இந்தியா வலுவாக பேசுகிறது என்றால் ஒருவேளை அவர்கள் தங்களை தாங்களே வலுவானவர்களாக மாற்றியிருக்க வேண்டும். அந்த தைரியத்தில் தான் அவர்களால் இவ்வாறு பேச முடிகிறது. இல்லையேல் இது போன்றவற்றை அவர்களால் பேச முடியாது. இறுதியில் இவை அனைத்தும் நீங்கள் உறுதியாக இருந்து வலுவான முடிவுகளை எடுப்பதை பொறுத்ததாகும்”

Babar Azam Mohammad Rizwan Shahid Afridi

“அதனால் ஆசிய கோப்பையில் விளையாட பாகிஸ்தானுக்கு இந்தியா வருமா? உலகக்கோப்பையில் விளையாட நாம் இந்தியா செல்வோமா? என்பது பற்றி எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. இருப்பினும் நாம் நம்முடைய கருத்தில் வலுவாக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஐசிசி தலையீடு மிகவும் முக்கியமானதாக இருக்கலாம். அவர்கள் இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இருப்பினும் பிசிசிஐக்கு முன்பாக ஐசிசி எதையும் செய்யாது என்று நான் உறுதியாக சொல்வேன். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு சென்று பாகிஸ்தான் உலகக் கோப்பையில் பங்கேற்க வேண்டும் என்று என்னால் உணர்வு பூர்வமாக சொல்ல முடியும்”

இதையும் படிங்க: IND vs AUS : 2வது போட்டி நடைபெறும் டெல்லி மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“ஆனால் அந்த முடிவை நாம் மிகவும் திட்டமிட்டு எடுக்க வேண்டும். அதே சமயம் நாம் நம்முடைய தற்போதைய பொருளாதாரத்தை பார்க்க வேண்டும். உலகில் நாம் தற்சமயத்தில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை யோசிக்க வேண்டும். அதனால் நாம் உணர்வு பூர்வமாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது” என்று கூறினார். அதாவது அஷ்வின் கூறுவது போல இந்த விவகாரத்தில் பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியாது என்றாலும் முடிந்தளவுக்கு இந்தியாவுக்கு எதிர்ப்பு கொடுக்க வேண்டும் என்று அப்ரிடி கூறியுள்ளார்.

Advertisement