IND vs AUS : 2வது போட்டி நடைபெறும் டெல்லி மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Delhi Cricket Stadium
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ளது. பிப்ரவரி 9ஆம் தேதியன்று நாக்பூரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு துறையில் அதிரடியாக செயல்பட்ட இந்தியா ஆஸ்திரேலியாவின் பிட்ச் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. மறுபுறம் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் சொந்த மண்ணில் தோல்வியை கொடுத்த இந்தியாவை இம்முறை பழி தீர்க்கும் முனைப்புடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அதற்கேற்றார் போல் செயல்படாமல் அவமான தோல்வியை சந்தித்தது.

இருப்பினும் தரமான வீரர்களைக் கொண்டுள்ள அந்த அணி 2வது போட்டியில் வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க போராட உள்ளது. ஆனால் 2004க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் கடந்த 10 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் வென்று வரும் இந்தியா 2வது போட்டியிலும் வென்று ஆரம்பத்திலேயே இத்தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்ந்துள்ளது இந்தியாவுக்கும் மிட்சேல் ஸ்டார்க் சேர்ந்துள்ளது ஆஸ்திரேலியாவுக்கும் பலத்தை கொண்டுள்ளது.

- Advertisement -

டெல்லி மைதானம்:
அதனால் இப்போட்டியில் இந்தியாவுக்கு சரிக்கு சமமான சவாலை ஆஸ்திரேலியா கொடுக்கும் என்று உறுதியாக நம்பலாம். எனவே அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இப்போட்டி பிப்ரவரி 17ஆம் தேதி தலைநகர் டெல்லியில் இருக்கும் அருண் ஜேட்லி மைதானத்தில் காலை 9.30 மணிக்கு துவங்குகிறது. கடந்த 1883ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு பெரோசா கோட்லா என்ற பெயருடன் இப்போதும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள மிகவும் பழமையான இந்த மைதானத்தில் 1948 முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

1. அதில் இதுவரை நடைபெற்றுள்ள 34 போட்டிகளிலும் களமிறங்கியுள்ள இந்தியா 13 வெற்றிகளையும் 6 தோல்விகளையும் சந்தித்துள்ளது. 15 போட்டிகள் டிராவில் முடிந்தன. குறிப்பாக இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 3 வெற்றிகளை பதிவு செய்தது. ஆஸ்திரேலியா 63 வருடங்களுக்கு முன்பாக கடந்த 1959இல் இங்கு முதலும் கடைசியாக இந்தியாவை தோற்கடித்தது. எஞ்சிய 3 போட்டிகள் டிராவில் முடிந்தன.

- Advertisement -

2. இந்த மைதானத்தில் அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த டாப் 3 வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் (759) திலீப் வெங்சர்க்கார் (671) சுனில் கவாஸ்கர் (668) உள்ளனர். இந்த மைதானத்தில் அதிக சதங்கள் (4) அடித்த வீரராக திலிப் வெங்சர்க்கார் உள்ளார். இந்த மைதானத்தில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர்களாக விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் (தலா 4) ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். இம்மைதானத்தில் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் பதிவு செய்த வீரர் : விராட் கோலி – 243, இலங்கைக்கு எதிராக, 2017

3. இம்மைதானத்தில் அதிக விக்கெட் எடுத்த டாப் 3 வீரர்களாக அனில் கும்ப்ளே (58) கபில் தேவ் (32) அஷ்வின் (27) உள்ளனர். இந்த மைதானத்தில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பவுலர் : அனில் கும்ப்ளே – 10/74, பாகிஸ்தானுக்கு எதிராக, 1999

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
டெல்லியில் அந்த காலம் முதல் இப்போது வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்பின்னர்கள் ராஜாங்கம் நடத்தி வருவதை அனைவரும் அறிவோம். குறிப்பாக இங்கு நடைபெற்ற கடைசி 3 போட்டிகளில் எடுக்கப்பட்ட 96 விக்கெட்டுகளில் 66 விக்கெட்கள் ஸ்பின்னர்கள் எடுத்ததாகும். எனவே அவர்களுக்கு நிகராக புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுப்பார்கள்.

அதே சமயம் முதல் 3 நாட்களில் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த மைதானத்தில் ஆரம்பத்தில் செட்டிலாகி சூழ்நிலைகளை புரிந்து கொண்டு விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவிக்கலாம். இருப்பினும் நாட்கள் செல்ல செல்ல இங்கு பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகும்.

- Advertisement -

ஏனெனில் இங்கு வரலாற்றில் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் 342, 316, 237, 165 என்பது சராசரி 1, 2, 3, 4 இன்னிங்ஸ்களின் ஸ்கோராகும். அதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து முதல் இன்னிங்சில் பெரிய ரன்களை குவிப்பது இப்போட்டியில் ஆரம்பத்திலேயே வெற்றிக்கு வித்திடலாம்.

இதையும் படிங்க: பேட் கம்மின்ஸ்ஸை பின்னுக்கு தள்ளி அஷ்வின் முதலிடம் பிடிக்க வாய்ப்பு – அதுக்கு அவர் என்ன செய்யனும் தெரியுமா?

வெதர் ரிப்போர்ட்: இப்போட்டி நடைபெறும் 5 நாட்களிலும் டெல்லி நகரை சுற்றிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement