
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோற்றது. அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரில் தோல்வியைக் கொடுத்த தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது. அந்த பதிலடி வெற்றிக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பெரிய ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றி சில சாதனைகளையும் படைத்தனர்.
குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்கள் அடித்த 4வது இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். அதை விட ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பாகிஸ்தானின் ஷாஹித் அஃப்ரிடி சாதனையை உடைத்த அவர் புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன் பாகிஸ்தானுக்காக அஃப்ரிடி 351 சிக்சர்கள் அடித்ததே சாதனை.
தற்போது அவரை விட 100 போட்டிகள் குறைவாக 355 சிக்ஸர்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் நீண்ட காலமாக உடைக்கப்படாமல் இருந்த தம்முடைய சாதனையை தமக்கு மிகவும் பிடித்த ரோஹித் சர்மா உடைத்ததில் மகிழ்ச்சி என்று அஃப்ரிடி தெரிவித்துள்ளார். மேலும் 2008 – 2010 காலகட்டங்களில் டெக்கான் சார்ஜர்ஸ் ஐபிஎல் அணியில் ரோஹித் சர்மாவை இளம் வீரராக பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அப்போதே ஏதோ ஒருநாள் ரோஹித் சர்மா இந்தியாவுக்காக விளையாடுவார் என்று தாம் நினைத்தது இன்று நடந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது பற்றி அஃப்ரிடி பேசியது பின்வருமாறு. “சாதனைகள் என்றால் ஒருநாள் உடைக்கப்படும். தற்போது அந்த சாதனையை நான் எப்போதும் விரும்பக்கூடிய ஒருவர் உடைத்துள்ளதில் எனக்கு மகிழ்ச்சி”
“ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய போது ரோஹித் சர்மாவை நான் வலைப்பயிற்சிகளில் பார்த்துள்ளேன். அவருடைய கிளாஸ் என்னை கவர்ந்தது. அப்போதே என்றாவது ஒரு நாள் ரோஹித் இந்தியாவுக்காக விளையாடுவார் என்று எனக்குத் தெரியும். தற்போது தன்னை அவர் கிளாஸ் பேட்ஸ்மேன் என்பதை தமக்குத் தாமே நிரூபித்துள்ளார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: நீங்க செய்ற எல்லாமே சரியில்லை கம்பீர்.. முதுகெலும்பு விராட், ரோஹித் அதுக்கு தகுதியானவங்க.. அப்ரிடி சாடல்
இது போக டெஸ்ட், ஒருநாள், டி20 உட்பட ஆகிய ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் ரோஹித் சர்மா ஏற்கனவே படைத்துள்ளார். அதனாலேயே அவரை ரசிகர்கள் ஹிட்மேன் என்று அழைக்கிறார்கள். இப்படி தொடர்ச்சியாக அசத்தி வரும் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் 2027 உலகக் கோப்பையில் விளையாட முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.