கேப்டன் தோனி மாதிரி பாகிஸ்தானை யாராலும் ஆள முடியாது – பாக் ஜாம்பவான் வெளிப்படை பாராட்டு

dhonii
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இத்தொடரின் கோப்பையை வெல்வதற்கு நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கும் ஆஸ்திரேலியா, உலக டி20 அணியாக திகழும் இந்தியா உட்பட உலகின் டாப் 16 அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அந்த வகையில் இத்தொடரில் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்புக்கு நிகராக அக்டோபர் 23ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற மெல்பேர்ன் மைதானத்தில் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

ஏனெனில் எல்லைப் பிரச்சனை காரணமாக இவ்விரு அணிகளும் கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு இதுபோன்ற ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன. அதனால் இவ்விரு அணிகள் மோதும் போட்டிகளுக்கு முன்பைவிட மவுசு எகிறியுள்ள நிலையில் கடந்த 1992 முதல் களமிறங்கிய அத்தனை உலகக் கோப்பை போட்டிகளிலும் தொடர்ச்சியாக பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி நடை போட்டு வந்தது. அதனால் உலக கோப்பை என்றாலே பாகிஸ்தானை இந்தியா அசால்ட்டாக தோற்கடித்து விடும் என்ற நிலைமை ஏற்பட்டது இவ்விரு அணிகள் மோதும் போட்டிகளுக்கு மேலும் சிறப்பம்சத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

தோனி மாதிரி வராது:
ஆனால் விளையாட்டு என்றால் ஒருநாள் தோற்றே தீர வேண்டும் என்ற விதிப்படி கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்தியாவை பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்றிலேயே முதல் முறையாக உலகக் கோப்பையில் தோற்கடித்து சரித்திரத்தை மாற்றி எழுதியது. அதனால் அவமான தோல்வியை சந்தித்த இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் லீக் சுற்றில் அதற்கு பதிலடி கொடுத்தாலும் மீண்டும் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடம் மண்ணைக் கவ்வி பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது.

அதனால் மீண்டும் அவமான தோல்வியை சந்தித்துள்ள இந்தியா அதற்க்கு உலக கோப்பையில் பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. இந்நிலையில் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை அசால்ட்டாக தோற்கடித்து ஓரம் கட்டியதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சாகித் அப்ரிடி வெளிப்படையாக பாராட்டியுள்ளார். மேலும் அவரது காலத்தில் பாகிஸ்தானை ஒரு பொருட்டாகவே பார்க்காமல் எளிதாக தோற்கடித்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு அணிகளையே முதன்மையான எதிரணியாக தோனி பார்த்ததாக தெரிவிக்கும் அவர் சமீபத்திய தோல்விகளால் மீண்டும் அந்த நிலைமை மாறி விட்டதாக கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தோனி தலைமையிலான இந்திய அணியில் அவர்களது அணுகு முறை முற்றிலுமாக மாறியது. சொல்லப்போனால் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே இருந்த போட்டியை தோனி முடித்து விட்டார். ஏனெனில் அவரது தலைமையில் இந்தியா எங்களுக்கு எதிராக எப்போதும் எளிதாக வென்றது. அதனால் அவரது தலைமையில் அணுகு முறையை மாற்றிய இந்திய அணி பாகிஸ்தானை ஓரம் கட்டிவிட்டு ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளை அவர்களுடைய முதன்மை எதிரியாக பார்த்தது. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. இப்போதெல்லாம் இந்தியாவுக்கு மீண்டும் சவால் கொடுக்கும் அணியாக பாகிஸ்தான் வந்து விட்டது” என்று கூறினார்.

அவர் கூறுவது போல் 2007 முதல் 2016 வரை கேப்டனாக இருந்தபோது தோனி தலைமையில் எந்த ஒரு உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதே கிடையாது. ஆனால் அவர் விலகிய அடுத்த வருடமே 2017 சாம்பியன்ஸ் டிராபியில் அதுவும் இறுதிப்போட்டியில் மண்ணைக் கவ்விய இந்தியா 2021இல் உலகக் கோப்பையில் முதல் முறையாக அவமான தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க : மகளிர் ஆசிய கோப்பை : வெளுத்து வாங்கிய லேடி சேவாக், புதிய வரலாற்று உலக சாதனைகள்

அந்த வகையில் தோனியை போல் தங்களை யாருமே அசால்டாக தோற்கடித்து ஓரம் கட்டியது கிடையாது என்று சாகித் அப்ரிடி வெளிப்படையாக பாராட்டியுள்ளார். ஆனால் தோனி விலகியதும் கேப்டனாக வந்த விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் அவரைப்போல் அல்லாததால் பாகிஸ்தான் மீண்டும் தோல்விகளை பரிசளித்து சவாலை கொடுக்கும் அணியாக மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement