
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பைக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கப் போகும் இந்த தொடரில் 2007க்குப்பின் வெல்வதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. இந்த தொடரில் அயர்லாந்துக்கு எதிராக தங்களுடைய பயணத்தை துவங்கும் இந்தியா ஜூன் 9ஆம் தேதி பரம எதிரி பாகிஸ்தானை நியூயார்க் நகரில் சந்திக்கிறது.
கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியா விராட் கோலியின் அற்புதமான ஆட்டத்தால் பாகிஸ்தானை வீழ்த்தி மறக்க முடியாத வெற்றியை ருசித்தது. அதற்கு முன்பாக துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை முதல் முறையாக தோற்கடித்து பாகிஸ்தான் வெற்றி பெற்றது. ஆனால் அந்த ஒரு வெற்றியை தவிர்த்து டி20 உலகக் கோப்பையில் சந்தித்த அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி கண்டுள்ளது.
நிறைவேறாத ஆசை:
குறிப்பாக 2007 டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் பவுல் அவுட் முறையில் வென்ற இந்தியா இறுதிப்போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான வீழ்த்தி கோப்பையை வென்றதை மறக்க முடியாது. அது போக 50 ஓவர் உலகக் கோப்பையில் இதுவரை சந்தித்த அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது. அதனால் உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்பது பாகிஸ்தானைச் சேர்ந்த பலரது கனவாக இருக்கிறது.
இந்நிலையில் தம்முடைய கேரியரில் கிட்டத்தட்ட அனைத்து வெற்றிகளையும் சாதனைகளையும் பார்த்து விட்டதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியாவுக்கு எதிராக ஒரு உலகக் கோப்பை போட்டியில் மட்டும் தம்மால் வெற்றி பெற முடியவில்லை என்று அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதுவே தம்முடைய நிறைவேறாத ஆசை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு.
“நான் நிறைய கிரிக்கெட்டில் விளையாடி நிறைய சாதித்துள்ளேன். ஆனால் இந்தியாவை நாங்கள் உலகக் கோப்பையில் தோற்கடிக்க முடியவில்லை அது மட்டுமே என்னுடைய நிறைவேறாத ஆசை. இருப்பினும் 2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி கண்டது. அந்த தருணத்தில் நான் அங்கே இருந்திருக்க வேண்டும் என்று உணர்கிறேன்”
இதையும் படிங்க: ஃபிளிண்டாப் வம்புக்கு பலிகிடாவான ப்ராட்.. 6 சிக்ஸ்.. ருத்ரதாண்டவம் ஆடிய யுவ்ராஜ் சிங்.. டி20 உ.கோ ரீவைண்ட்
“அதுவே நான் தவற விட்ட ஒரு முக்கியமான தருணமாகும்” என்று கூறினார். முன்னதாக 2011 உலகக் கோப்பையில் சாகித் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி தோனி தலைமையிலான இந்தியாவிடம் செமி ஃபைனலில் தோற்றது. அதே போல 2012 டி20 உலகக் கோப்பையிலும் இந்தியாவிடம் அவரது தலைமையில் பாகிஸ்தான் தோற்றது குறிப்பிடத்தக்கது.